ஆட்சியை கவிழ்க்க ரூ.50 கோடி பேரமா? பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட ஸ்ரீவைகுண்டம் தவெக MLA!

மிரட்டலுக்கு பணியாத காரணத்தினால் என்னை கொலை செய்யும் நோக்கில்..
viji saravanan
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், மிரட்டல் விடுப்பதாக MLA விஜி சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். தற்போது அது தொடர்பாக ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து குதிரை பேரம் நடப்பதாக கூறி அதிமுக, திமுக மற்றும் பாஜக கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்தும் வருகின்றனர். இதற்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் திமுகவினர் குதிரை பேரம் நடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சுமார் 10 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி MLA விஜி சரவணன் ஏரலில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டு சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

மேலும் தன்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர வேண்டும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் என்ற போர்வையில் அணுகியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் திமுகவை சேர்ந்த புரோக்கர்கள் பெயரில் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் வைத்து தன்னை நேரடியாக பார்த்து “உங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் தருகிறோம்.. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீங்கள் திமுகவுக்கு வந்து விடுங்கள் உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறோம்” என பேரம் பேசியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். செய்வது போல் செய்யவில்லை என்றால் “உங்களை என்ன செய்வோம் என்று தெரியாது” எனவும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

“கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாகனத்தில் வரும்போது ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதுவும் எனக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தான் அவர்கள் மிரட்டலுக்கு பணியாத காரணத்தினால் என்னை கொலை செய்யும் நோக்கில் அந்த லாரியை ஏவி விட்டார்களா?” என தெரியவில்லை எனவும்  தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஒரு தொலைபேசி உரையாடல் ஆடியோ-வை வெளியிட்டுள்ளார். அதில் முத்துராமன் எனும் நபர் இவரிடம் பேரம் பேசியதாக தெரிகிறது. யார் அந்த முத்துராமன்? எந்த கட்சியை சேர்ந்தவர்? போன்ற பல கேள்விகளையும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆடியோ.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com