Chennai Maduravoyal Bypass Accident 
தமிழ்நாடு

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வாலிபர் பரிதாப பலி.. “25 வயதில் அநியாயமாக பறிபோன உயிர்” - அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா?

பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகளின் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன...

Mahalakshmi Somasundaram

சென்னையில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 25 வயது இளைஞர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு பணித்தளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான அரசு திட்டத்தில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள்கூட முறையாகச் செய்யப்படவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே மதுரவாயல் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் நீர்வளத்துறை சார்பில் “Cut-and-Cover” முறையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காகச் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 25 வயதுடைய ஹரிபிரசாத் எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடமும் அப்பகுதி மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா?

விபத்து நடைபெற்ற இடத்தில் முறையான தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்றும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் அடையாளங்கள் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடத்தில் எச்சரிக்கைப் பலகைகள், Reflective Signages, போக்குவரத்து வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்றுப் பாதை ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகளின் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ரூ.130 கோடி திட்டத்தில் பாதுகாப்பு எங்கே?

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்கால வெள்ளப் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் நீர்வளத்துறை மூலம் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு G.O. (D) No.69, Water Resources (I.Spl-2) Department, dated (20.06.2025) அரசாணை மூலம் ரூ.130 கோடி நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீபதி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் (Sripathi Constructions) நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இவ்வளவு பெரிய அரசுத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும்போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அடிப்படை ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டனவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் மீது அலட்சியப் புகார்

ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டாலும், அவை உரிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இந்தப் பணிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் திருவள்ளூர் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் (AEE), உதவிப் பொறியாளர் (AE) உள்ளிட்ட அதிகாரிகள் பணித்தளத்தை முறையாக ஆய்வு செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், பணித்தளத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே கவனம் செலுத்தியிருந்தால் இத்தகைய உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கான Strutting, Scaffolding உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் பணியிடத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்தார்களா? பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனப் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

25 வயது இளைஞரின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்வதுடன், தவறு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்ததாரர் கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் மற்றும் சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தடுப்புகள் அமைத்து விபத்துகள் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மைக் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இத்தகைய அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக்கூட அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சித்துள்ள அவர், இளைஞரின் உயிரிழப்புக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஒரு வெள்ள மேலாண்மைத் திட்டத்தின் பணிகள் நடைபெறும் இடத்திலேயே பாதுகாப்புக் குறைபாடு காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார், பணித்தளப் பாதுகாப்பு மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்புப் பொறுப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.