vijay erode 
தமிழ்நாடு

“ஆறு மாதத்தில் முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும்..” -அமைச்சர் ரகுபதி காட்டம்!

ஒன்று மட்டும் உண்மை, அவரை பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது.....

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

கரூர்  சம்பவத்திற்கு பிறகு,  விஜய் -க்கு மக்கள் சந்திப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை, மேலும் கடந்த 2 மாதங்களாக தமிழக வெற்றிக்கழகமே ‘silent Mode’ -ல் தான் இருந்தது. இந்த சூழலில்தான், கடந்த வாரத்திலிருந்து விஜய் மக்களை சந்திக்க துங்கியுள்ளார், மேலும் மக்கள் சந்திப்பிலும் அவருக்கு ரோட் ஷோ -க்கு அனுமதி கிடையாது. பாண்டிச்சேரியை அடுத்து, ஈரோட்டிலும் நேற்றைய தினம் அவர் திறந்தவெளி மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். 

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டார். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்திருந்தார். 

இந்த சந்திப்பில் விஜய் மிக மிக காட்டமாக திமுக -வை விமர்சித்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேசியதை மேற்கோள் காட்டி திமுக ஒரு தீய சக்தி என கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த சூழலில் திமுக அமைச்சர் ரகுபதி  இதற்கு பதிலளித்துள்ளார், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “நாங்கள் தீய சக்தியும் இல்லை, தவெக தூய சக்தியும் இல்லை…  நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக ‘தீய சக்தி தூய சக்தி’  என்று எதுகை மோனையில் கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்கு தான் தெரியும். அவரிடம் தான் கேட்க வேண்டும் நாம். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பாஜகவின் சி டீமாக இருக்க கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை, அவரை பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும் அரசியலில் உண்மையில் நடக்காது.  எம்ஜிஆர் 1972ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன் தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தை காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கிறது. ஆனால் விஜய் அந்த தேர்தலில் புறமிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டு கொள்ளவில்லை. 

எம்ஜிஆரையும்  விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார் விஜய். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை.  பாஜகவின் சீடீம் தான் விஜய்.

 கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்படி இருக்கையில் அவருக்கு கொள்கை வேறு கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பாஜகவின் அடிமையாக அவர் இருக்கிறார். 

அதிமுக கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். திமுகவை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும். தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இருக்கிறது” என அவர் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.