cm Vijay Thevar Jayanthi Tribute 
தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை.. பசும்பொன் செல்லாதது ஏன்?

ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது வழக்கம்....

Mahalakshmi Somasundaram

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நந்தனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தேவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் விஜய் வருகையை அறிந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற முதலமைச்சர், பின்னர் தனது காரில் ஏறி தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் பசும்பொன் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

ஆனால், அவரது பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், முதலமைச்சர் அங்கு சென்றால் கூட்ட நெரிசல் அதிகரித்து பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பசும்பொன் பயணத்தைத் தவிர்க்குமாறு காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய்யின் பயணத் திட்டம் மாற்றப்பட்டதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.