CM Vijay statement CM Vijay statement
தமிழ்நாடு

கோயம்புத்தூர் சிறுமி கொலை வழக்கில் முதலமைச்சர் வருத்தம்! "இதுபோன்ற குற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஆவேசம்"

உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

Vinvizhi Leninton

10 வயது சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் தற்போது இருவரை கைது செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து தனது X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் 21ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் சிறுமி ஒருவர் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமியை அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இருவரை கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது குழந்தையில் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.