தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் சைகை.. “மனித மாண்புக்கு எதிரானது” - திருமாவளவன் கடும் கண்டனம்! 'வரலாற்றுப் பிழை' என்றும் காட்டம்

திமுக தலைவர் குறித்து முற்றிலும் பொய்யான ஒரு அறிக்கையை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.

Muthu Lakshmi

கடந்த 7 தேதி சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் அன்று முதல்வர் விஜய்யின் பதிலுரையும் அடங்கி இருந்தது. சுமார் ஒரு மணி உரையாற்றிய முதல்வர் சர்க்காரியா கமிஷன், மிசா கைது உட்பட பல விவகாரங்களை பற்றி பேசுகையில் ஒரு சைகை ஒன்றை செய்திருந்தார். முதல்வர் விஜய் இந்த விஜய்யின் சைகை மிசா கைதின் போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகி, தாடையில் காயமடைந்ததை கேலியாக சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது என விமர்சனங்கள் எழுந்தன. 

மேலும் இது குறித்து அடுத்த நாள் சட்டப்பேரவையில் திமுக கொறடா எவ வேலு அவர்கள், "மிசா தியாகத்தை சைகையால் கொச்சை செய்கிறார் முதலமைச்சர்" எனக் கூறியிருந்தார். அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை சபாநாயகரால் மறுக்கப்பட்டதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினார். அதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்திலும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன. மேலும் இடதுசாரி கட்சி தலைவர்களும் இது குறித்து தங்களது எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

பல விவாதங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பின், முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என்று தெரிவித்திருந்தார். மேலும் “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் கேட்டு கொண்டார்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் “முதலமைச்சரின் உடல்மொழி.. மனித மாண்புக்கு எதிரானது!” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நாங்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இதுபோன்ற 'உடல்மொழிகள்' ஒரு கண்ணியமான அணுகுமுறை அல்ல, மேலும் அவை மனித மாண்புக்கு எதிரானவை” என்றும் “எந்தச் சூழலிலும் ஒருவரின் 'சுயமரியாதையை' சிறுமைப்படுத்துவதோ அல்லது காயப்படுத்துவதோ நாகரிகமானதல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு தனிநபருக்கு எதிரான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; ஒருவரின் சுயமரியாதையை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் விமர்சனங்கள் வேறு” என்றும் சமூகத்தில் பெரியவர்களை மதிப்பது மனித மாண்புகளிலேயே மிக உயர்ந்தது. எனவே, கண்ணியத்துடன் பெரும் பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர், இனிமேல் தனது உடல்மொழியில் மிகுந்த கவனம் செலுத்துவது நன்மை பயக்கும்” என்று அறிவுறுத்தி உள்ளார். 

அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் நிர்மல்குமார் மிசா குறித்து பேசியது பிழை என்றும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் பதிலுக்கு அடுத்த நாள், முதலமைச்சரின் உரையின் சில பகுதிகளைப் பதிவேடுகளிலிருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. அந்த விவாதத்தின் போது, ​​சட்ட அமைச்சர் குறுக்கிட்டு கூறிய கருத்து ஒரு வரலாற்றுப் பிழையாகும். நெருக்கடி காலத்தின் போது நிலவிய அரச பயங்கரவாதத்தின் தன்மை நாட்டுக்கு நன்கு தெரியும். அந்தக் கொடூரமான அடக்குமுறையின் கீழ், திமுக தலைவர் குறித்து முற்றிலும் பொய்யான ஒரு அறிக்கையை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. மாண்புமிகு அமைச்சர் அதைத் திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் வன்மையாக கேட்டுக்கொள்கிறோம்” என்றும் கண்டனைத்தை பதிவு செய்துள்ளார் அவர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்