"தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.." - ஆதவுக்கு பெ. சண்முகம் பதிலடி! 
தமிழ்நாடு

TVK vs CPIM: "தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.." - ஆதவ் பேச்சுக்கு பெ. சண்முகம் பதில்

கடந்த ஆட்சியில் திமுகவுக்கு எதிராக சிபிஐஎம் குரல் எழுப்பியதா என்ற தவெக அமைச்சரின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "சாம்சங் போராட்டத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியுமா?" எனக் கேள்வி எழுப்பினார் சண்முகம்!

மாலை முரசு செய்தி குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னதாக தவெக மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் உழலே நடக்கவில்லை என சண்முகம் சொல்லுவாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சண்முகம், " முதலமைச்சர் அவர்கள் 'மூன்று கோப்புகள்' தனது டேபிளில் இருப்பதாகவும், அதை எப்போது வேண்டும் என்றாலும் திறப்போம் என்றும் நீண்ட காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஆட்சி அமைந்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆகவே அவர்கள் கையில் இருக்கக்கூடிய ஆவணங்களின் அடிப்படையில் அப்படி ஊழல் முறைகேடுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர், எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆதவ் சார்பில் நான் வழிமொழிகிறேன்.

எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாது!

மேலும் பேசிய அவர், "எல்லா ஆட்சிக் காலத்திலும் நாங்கள் ஆதரவு, எதிர்ப்பு என்ற இரட்டை நிலைகளை எடுத்திருக்கிறோம். மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கின்ற போது மனப்பூர்வமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. மக்களுக்கு எதிரான, மக்களுக்கு பாதகமான, தமிழகத்திற்கு விரோதமான திட்டங்கள் வருகின்ற போது உறுதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்.

எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுதான் எங்களுடைய அணுகுமுறை. ஒருவேளை எங்களுடைய அணுகுமுறை புரியாத காரணத்தினால் தவெகவில் இருக்கக்கூடிய பல அமைச்சர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்த அணுகுமுறை தொடரும். அவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள் என்பதற்காக எங்களுடைய அணுகுமுறையை நாங்கள் மாற்றிக் கொள்ள முடியாது. ஆதரவளிப்பது, எதிர்ப்பது, எடுத்துரைப்பது, எடுத்துரைப்பது, எதிர்ப்பது எல்லாம் தொடரும்." என்றார்.

தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்!

இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு, "பல இடங்களில் தவெக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம் அவர் ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்று இப்போது தவெக சார்பில் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது. எதற்காக ராஜினாமா செய்தார், திரும்ப எதற்காக இந்த பதவிக்காக போட்டியிடுகிறார் என்பது மக்களுக்குத் தெரியவில்லை.

அந்தக் கோபத்திலிருந்து பொதுமக்கள் பல இடங்களிலும் அவர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள் என்கிற செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை அத்தகைய வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ள எதிர்ப்பால் அச்சுறுத்தலில் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்." என்றார்.

அதிகாரி மீது நடவடிக்கை எடுங்கள்!

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவை எடுக்கவில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "முதலமைச்சர் இறுதியான முடிவை எடுக்காமல் எப்படி அரசாணை வெளிய வந்திருக்கிறது என்று சாதாரண கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்.

அரசாணை எண் 564 சீனிவாசபுரத்தில் தலைமை செயலகம் அமைப்பது என்கிற அரசின் முடிவைத்தான் வெளிப்படுத்துகிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை வெளிய வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் வந்திருக்கிறது என்றால் இது தவறான முடிவு, ஆகவே இடத்தை மாற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிறது, மாற்று இடங்களையும் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

இது தமிழகத்தினுடைய நலன் மற்றும் மக்களின் நலனுக்காக நாங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை. வேறு யாராவது ஆட்சியில் இருந்தாலும் இந்த சிக்கலில் இதே கோரிக்கையைத்தான் நாங்கள் வைத்திருப்போம். இது தவெக-வுக்கு எதிரான கோரிக்கை அல்ல.

தலைமைச் செயலகம், சட்டமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அனைத்தும் நிரந்தரமான கட்டிடங்களாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்.

அதற்கான பல இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே இருக்கும்போது விசித்திரமாக மீனவர்கள் குடியிறுப்புகள் இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மீனவர்களை அப்புறப்படுத்தி அமைக்க வேண்டும் என்பது தவறான நடவடிக்கை. எனவே ஆதவ் அர்ஜுனா இதில் சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. அரசாணை வெளிய வந்திருக்கிறது என்றால் அது அந்தத் துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் தெரியாமல் வந்திருக்க முடியாது.

முதலமைச்சர் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் அதை முதலமைச்சர் சொல்ல வேண்டும். அரசு தரப்பிலிருந்து இதுபோன்ற எந்த கருத்துமே வரவில்லை.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்து சமாளிப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்." என்றார்.

சாம்சங் தொழிலாளர் போராட்டம் தெரியுமா?

கடந்த ஆட்சியில் திமுகவுக்கு எதிராக சிபிஐஎம் குரல் எழுப்பியதா என்ற கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "சாம்சங் போராட்டத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியுமா?

தீக்கதிர் வாசிக்க அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். ஏனென்றால் புதிய கட்சி என்பதால் அவர்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்திருக்கலாம்.

திமுக ஆட்சிக்காலத்தில் அனகாபுத்தூர் வீடுகள் இடிக்கப்பட்டபோது நேரடியாக சென்று அதை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உயர்நீதிமன்ற உத்தரவு என்கிற பெயரில் குடிசைகளை அப்புறப்படுத்தப்பட்டபோது, அப்போதைய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று சட்டமன்றத்திலும் அந்தப் பிரச்சனையை எழுப்பி... அதிலே திமுக அரசை திக்குமுக்காட செய்தது நாங்கள்தான்.

சாம்சங் தொழிலாளர் போராட்டம் என்றென்றைக்கும் வரலாற்றில் இடம்பெறக்கூடிய போராட்டம், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய போராட்டம். இதுபோன்ற பல போராட்டங்களை திமுக ஆட்சிக் காலத்தில் நடத்தி இருக்கிறோம்.

நாங்கள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கை நியாயமா இல்லையா என்பதைத்தான் அவர்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர, நாங்கள் இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினோமா, அந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினோமா என்று பார்ப்பது திசைதிருப்பும் செயலாகத்தான் இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 8 மணி நேர வேலை என்பதை மாற்றும் விதமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.

மற்ற தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். அனைத்து தொழற்சங்கங்களையும் திரட்டி அந்த சட்டத்தைத் திரும்ப பெறவில்லை என்றால் மாநில அளவிலேயே போராட்டம் நடத்துவோம் என்ற எதிர்ப்பை முன்னெடுத்தது நாங்கள்தான். அதற்குப் பிறகுதான் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த சட்டத்தைத் திரும்பப் பெற்றார். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் எங்களால் சொல்ல முடியும்.

தவெக ஜனநாயகப் பூர்வமாக இல்லை

தவெக-வின் அணுகுமுறை இன்னும் ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறையாக தெரியவில்லை. அவர்கள் பல விஷயங்களைத் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது, கலந்துரையாடலை நடத்துவது, ஒரு ஜனநாயகப்பூர்வமான விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்குவது என்பதுதான் ஒரு நல்ல அரசிற்கு அழகு. அத்தகைய அணுகுமுறை என்பது அவர்களிடத்தில் இல்லை." என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்