“இதுதான் இவர்களின் மானக்கெட்ட மாற்றமா?” - தவெக ஆட்சியை விளாசிய MK ஸ்டாலின்.. திமுக முப்பெரும் விழாவில் ஆவேச பேச்சு

"கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.. இந்த கொடுமை எல்லாம் பாக்காம இருக்க..."
M K stalin
Published on
Updated on
3 min read

திமுக முப்பெரும் விழா இன்று சென்னையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக கொள்கைத் தலைவர்கள் அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன், திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், “இப்போது நடக்கும் ஆட்சிக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. ஆனா, ஏதோ பெரிய ஆள அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்கள வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிட்டு இருக்காங்க”.

நம்ம கூட்டணியில் வென்றவர்கள் ஆதரவில்தான் ஆட்சி நடக்கிறது. ஆதரவு தந்த கட்சிகளையே நம்பாமல், குதிரை பேரம் நடத்திட்டு இருக்கிறதுதான் ஆளுங்கட்சியின் லட்சணம். இப்படி ஒரு பலவீனமான ஆட்சி அமைத்த கட்சி என்ன செய்யணும்? நியாயமா மக்கள் நலத் திட்டங்களை செஞ்சு நல்ல பேர் வாங்க பார்க்கணும். நம்ம திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவது, இல்ல திட்டத்திற்கு பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவது... இதுதான் மாற்றமா? முதலமைச்சரைப் பொறுத்தவரைக்கும் டெய்லி ஷூட்டிங் மூட்லதான் இருக்காரு.

சினிமாவில நடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொல்லிட்டு, இயக்குநர் யாரு, கேமராமேன் யாருனு சொல்லாம இப்ப மக்கள் முன்னாடி நடிச்சிட்டு இருக்காரு. முதலில் பஞ்ச் டயலாக், இப்போ பாரின் சூட்டிங். பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செஞ்சதன் மூலம், தமிழ்நாட்டோட வளர்ச்சியை ஏறக்குறைய 25 ஆண்டு காலம் பின்னுக்கு தள்ளிட்டாங்க.

மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் நடக்குது. தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன்னா இருந்துச்சு. ஆனா இப்போ விலைவாசி உயர்வில் நம்பர் ஒன் மாநிலமாக ஆகப்போறோம். ஆனா, முதலமைச்சரைப் பொறுத்தவரைக்கும் அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ நாட்டுக்கு அவசியமான செய்தி என்ன தெரியுமா? சிஎம் இன்னைக்கு என்ன கோட்டு போட்டார்? வெள்ளிக்கிழமை பட்டு வேஷ்டி போட்டாரா? நெத்தியில் என்ன கலர் பொட்டு? கையில் என்ன கலர் கயிறு? ஜோசியர் இன்னைக்கு என்ன சொல்லி இருக்கிறார்? இதுதான் செய்திகளா இன்னைக்கு வந்துட்டு இருக்கு. முதலமைச்சரும் இதையெல்லாம் செஞ்சாவே போதும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்.

திமுக முப்பெரும் விழா

இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம்னு பேசப்பட்ட நாட்டில், அது எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி கோட்டு, சூட்டு, வேட்டி, சட்டை போட்டாரு, கால்ல நடந்தாரு, கையால செய்கை செஞ்சாரு, வாயில சாப்பிட்டாரு... இப்படித்தான் செய்தி வருது. இதெல்லாம் பாக்க ரொம்ப அருவருப்பா, அசிங்கமாவே இருக்கு.

அவங்க பாஷையில சொல்லணும்னா, தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவுலதான் போட்டியே. ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு. பட்டப்பகலில் கொலைகள், ஆளுங்கட்சியினரே போதைப் பொருட்களை விற்பனை செய்றது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது... இப்படி குற்றவாளிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது தமிழ்நாடு. இவர்களால் மக்களை எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு பயணம் செய்தார்.

திமுக முப்பெரும் விழா

இதுக்கு முன்னாடி நான் வெளிநாட்டுக்கு பயணம் செஞ்சப்ப என்ன பேசினார்? ‘சிஎம் சார் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடான்னு’ மேடையில கத்தினாரு. இப்ப தமிழ்நாட்டு மக்கள் அவரைப் பார்த்து கேட்கணும். இந்தியாவில் இருக்கிற கம்பெனிக்கு எதுக்கு லண்டன் போய் கையெழுத்து போடுறீங்கன்னு சத்தமா கேட்கிறாங்க. அதைவிட பெரிய கொடுமை, தொழில்துறை அமைச்சர் இல்லாம, தொழில்துறை செயலாளர் இல்லாம முதலீடுகளை ஈர்க்க போயிருக்கிறார் முதலமைச்சர்.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், "கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.. இந்த கொடுமை எல்லாம் பாக்காம இருக்க... கூட்டத்துல பார்த்திருப்பீங்க, முதலமைச்சர் சிரிக்கிறதை பார்க்க முடியலன்னு கவலைப்பட்டு சட்டப்பேரவையில தனி ஸ்கிரீன் வைக்க சொல்லி ஆளுங்கட்சி மக்கள் கேட்கிறாங்க. இதுதான் நாட்டுக்கு தேவையா? சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தம்பி உதயநிதி கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மிசா, சர்க்காரியா கமிஷன் சம்பந்தமில்லாமல் பேசி, அவதூறுகள் பரப்பி, டைவர்ஷன் பண்றாங்க. மிசா பத்தி பேசுறவங்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒன்னே ஒன்னுதான். என் மிசா கைது குறித்து உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சிறைச்சாலை சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இஸ்மாயில் கமிஷன் அமைத்தார். படிக்கத் தெரிந்தவனா இருந்தா, அதை எல்லாம் எடுத்து படிக்கட்டும்.

விரலில் வைத்த மை இன்னும் காயல, அதுக்கு முன்னாடி ராஜினாமா செய்ய சொல்லி... வெட்கமே இல்லாம அதே ஆட்களை நிக்க வச்சு இருக்காங்க. இது தான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா? சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால்தான் இடைத்தேர்தல் வரும். முதல் முறையாக ஜனநாயகம் மரணம் அடைந்துள்ளது. அரசாங்கமே இப்போது செயலிழந்து போய் உள்ளது.

ஒரே நாளில் எட்டு கொலைகள். இன்னைக்கு அது மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகளில். இரட்டைக் கொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் படுகொலைகள், டாஸ்மாக் தகராறு கொலைகள்... இது எல்லாத்தையும் கவர்ச்சியால் சரி கட்டலாம்னு ஆணவத்தோடு இருக்கக்கூடிய ஒருத்தர்தான் முதலமைச்சராக இருக்கார். மீடியாவை சந்திச்சு பதில் சொல்ல மாட்டேன் என்று திமிரா இருக்கார். இந்த திமிரினத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இடைத்தேர்தல்’ என்று பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com