Cyclone Murasu 
தமிழ்நாடு

"முரசு புயல் எதிரொலி" - சென்னை கடற்கரையில் ராட்சத அலைகள்.. எச்சரிக்கும் காவல்துறை - அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழையா?

'முரசு புயல்' காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழும்பி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' புயல் தீவிரப் புயலாக வலுபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக எச்சரிக்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 'பொதுமக்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம்' என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான 'முரசு புயல்' தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டது. அதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. தற்போது, 'முரசு புயல்' காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழும்பி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "பொதுமக்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம்" என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, 'பொதுமக்கள் கடலில் இறங்கி குளித்தல், நீந்துதல் மற்றும் கடற்கரையில் நீர் அருகே நின்று பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை கடற்கரைப் பகுதிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் உயிர்காப்புப் பணியாளர்கள் வழங்கும் எச்சரிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவசர காவல்துறை உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனவும் சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மழை தொடருமா? :

மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கோவை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு:

வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 4 காலை வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அனைத்து மீன்பிடிப் பணிகளும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் எனவும், படகுகளைக் கண்காணித்து, மீனவர்கள் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வழிகாட்டும் பணியில் மீன்வளத் துறையும் துறைமுக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 'முரசு புயல்' காரணமாக சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.