நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியபோது ஆற்றிய உரையில் அரசியல் சாயல் இருப்பதாகப் பேச்சு எழுந்தது.
அப்போதே அவர் அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். தேசிய விருது வாங்கச் சென்றபோது, கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்ற கேள்விக்குச் சிரித்தபடி பதிலளிக்காமல் சென்றார். அதையே மீண்டும் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டிருந்தவர், இப்போது மகளிர் அணி சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார். அதில் அவர் ஆன்மிகக் கருத்துகள் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில், தனுஷை பாஜகவின் 'D பிளான்' என விமர்சித்துள்ளார் மாணிக்கம் தாகூர். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் சமீபத்தில் தனுஷுக்கு எதிராகப் பேசியிருந்தார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த தனுஷ் யார் யாரைச் சந்தித்தார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேடைகளில் 'ஓம் நம சிவாய' என்று சொல்லிவரும் தனுஷ், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் திட்டங்களைச் செயல்படுத்தும் அடுத்த அண்ணாமலையாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் தனுஷ் அதிமுகவில் இணைவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தனுஷ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான டீல் சரியாக வரவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் தனுஷ் அடுத்ததாக தனிக்கட்சி திட்டத்தில் தீவிரமாக இறங்கினார். ஆனால் டெல்லி பயணத்துக்குப் பிறகு வருகின்ற தகவல்கள் வேறு மாதிரி தெரிவிக்கின்றன.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை, பதவி விலகிய பிறகு தனிக் கட்சித் தொடங்கிவிட்டார். இப்போது இருக்கும் நயினார் நாகேந்திரன் பதவிக்காலம் 2 ஆண்டுகளில் முடிந்துவிடும். அந்த இடத்தை நிரப்ப செல்வாக்கான நபரைத் தேடி வருகிறது பாஜக தேசிய தலைமை. இந்த நிலையில் 2031 அசைன்மெண்ட்டுக்கு தனுஷ் தலைமை ஏற்கலாம் என சலசலக்கப்படுகிறது.
ஆனால் தனியாக நற்பணி மன்றத்தை வலுப்படுத்தி வரும் தனுஷ் பாஜக கட்டமைப்பை சார்ந்திருக்கத் தேவையில்லை எனும்போது கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தனுஷ் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தால் ரஜினிகாந்த் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக கருதப்படுகிறது.
தனிக் கட்சியாக இருந்தாலும் சரி, தலைமைப் பொறுப்பாக இருந்தாலும் சரி தனுஷ் ஆர்எஸ்எஸ் ஆதரவாகவே முடிவெடுப்பார் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதே ஆன்மிக அரசியலுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. காமாட்சி விளக்கில் இருந்த தாமரை அழுத்தமாக வலியுறுத்தியது.
ஆனால் இதற்கு தனுஷ் முன்வைத்த நிர்பந்தம் என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை.
நடிகர் விஜய் ஆட்சியைப் பிடித்தது முதல் முன்னணி நடிகர்கள் யாவரும் அதுவரை தங்கள் 'மார்க்கெட்' அளவாக கருதி வந்த ரசிகர்களை வாக்கு வங்கியாகவும் கருதத் தொடங்கிவிட்டனர்.
பெரிய கோட்பாட்டு எடுத்துரைப்புகள், கொள்கை விளக்கங்கள், அரசியல் போராட்டங்கள் எதுவும் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டி, இரண்டரை ஆண்டுகளில் தவெக ஆட்சிக்கு வரும்போது தங்களாலும் அதிகாரத்தை ஒரு துண்டை சுவைக்க முடியும் என அடுத்தடுத்து நடிகர்கள் கிளம்பியிருக்கின்றனர். கட்சிகளும் சினிமாவில் தூண்டில்களை போட்டிருக்கின்றன.
இந்த நிலையில் விஜய்க்கு அடுத்ததாக நடிகர்கள் யாரும் உருவாகிவிடாமல் கவனமாக பார்த்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம். தனுஷை ஆதவ் அர்ஜுனா 'சைத்தானின் பிள்ளை' என விமர்சித்தது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து நடிக்கர்களுக்கும் தவெகவின் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்