தமிழ்நாடு

தமிழ்நாட்டின் ஆளுநருக்கு பிரியாவிடை! மேற்கு வங்கத்தில் நாளை பதவியேற்கிறார் ஆர். என். ரவி..

"54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன்"..

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் ஆளுநர் ஆர். என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆர். என். ரவிக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு பற்றி விரிவாக பார்க்கலாம்.

யார் இவர்? ஆர். என். ரவி பிகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார். இவர் 1974-இல் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை முடித்த இவர் 1976-இல் இந்திய காவல் பணியில் சேர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். ​ மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) பணியாற்றியதோடு ஏராளமான ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பை எட்டும் நடவடிக்கைகளிலும் கூட இவர் பங்காற்றி இருக்கிறார். 2012-இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய நாளேடுகளில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். மேலும், 2014, ஆகஸ்ட் மாதம் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசால் இவர் நியமிக்கப்பட்டார். 2019, ஆகஸ்ட் 1 முதல் 2021, செப்டம்பர் 16 வரை நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

தமிழக ஆளுநராக..தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஆர். என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அரசியல் கட்சிகள் அன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்த ஆளுநர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை கேட்டு, அதனை விளக்கும்படி உத்தரவிட்டார். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை, சட்டப்பேரவை நிறைவேற்றிய 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி அதை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார். இதனைக் கண்டித்து தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆளுநர் மாளிகையில் அவர் நடத்திய தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தன.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு” என்பதற்குப் பதிலாக “தமிழகம்” என்பதே மிகவும் பொருத்தமான சொல் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பினார். பின்பு அக்டோபர் மாதம், ஆளுநர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையின்றி தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது எனவும், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றவும் உத்தரவிட்டது. இதே போன்றே ஆன்லைன் ரம்மி போன்ற பணமிழக்கும் அபாயமுள்ள விளையாட்டுக்களை தடை செய்யக் கோரிய மசோதாவையும் கிடப்பில் போட்டார். பின்பு மாநில அரசின் அழுத்தத்தின் பெயரிலேயே ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இது மட்டுமின்றி ஆளுநர் உரையை முறையாக முழுமையாக படிக்காமல் தவிர்த்தது, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சபாநாயகருடன் ஏற்பட்ட மோதலால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன. அதன் பின்பு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியது.

மேலும், திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்துமே பேசி இவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு "எண்ணித் துணிக" என்ற பெயரில் ஆளுநர் விருதுகளை வழங்கி வந்த நிலையில், சிறப்பாக செயல்பட்ட 50 மருத்துவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் திருக்குறள் பதித்த விருது ஒன்றினை வழங்கினார். அதில் பதித்திருந்த திருக்குறள் திருவள்ளுவர் எழுதியதே இல்லை என்றும் அப்படி ஒரு குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்திலும் இல்லை என்றும் கூறி எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. அதன்பின்பு விருதுகள் திரும்ப பெறப்பட்டது. அதன் பின்னர் திருவள்ளுவர் திருநாள் விழாவின் அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

பிரியாவிடை: இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவியை கடந்த 5ம் தேதி மேற்கு வங்க கவர்னராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டைக் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். "வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று பேசியிருக்கிறார். மேலும் தமிழ்நாட்டைக் குறித்தும் நீண்ட செய்தியை வெளியிட்டு தனது பிரியா விடையைத் தெரிவித்தார் ஆர். என். ரவி.

தற்போது மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் மேற்கு வங்கம் புறப்பட்டு செல்லும் ஆர். என். ரவிக்கு கல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நாளைப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.