

இந்தியாவின் பல மாநிலங்களில் நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஆளுநர்கலாய் மாற்றி நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். இந்த மாற்றம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ், கடந்த மார்ச் 5 திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, "ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தை செலவிட்டு விட்டேன்" என பதிலளித்துள்ளார் ஆனந்த போஸ்.
இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் புதிய ஆளுநரை நியமிக்கும் முடிவின் பேரில், தற்போது தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர்.என் ரவி 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக ஆளுநராக இருந்த காலகட்டத்தில் அவருக்கும் தமிழக அரசுக்கு இடையே பதற்றமான உறவுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மேற்கொள்ள உள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த சிவ் பிரதாப் ஷுக்லா தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், தற்போதைய நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக கிஷோர் யாதவ் நியமிக்கப்பட்டார் மற்றும் பீகார் மாநிலத்தின் ஆளுநராக சையத் அடா ஹஸ்னன் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் 21 வது துணைநிலை ஆளுநராக முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா லடாக் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா இமாச்சல் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த ஆளுநர் மாற்றங்கள் பல மாநிலங்களில் நிர்வாக மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.