தமிழ்நாடு

“லண்டன் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா?” - முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

"முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்தான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் தெரிவித்தார்

Muthu Lakshmi

ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போதைய அரசியல் சூழல், இடைத்தேர்தல் மற்றும் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்தும் பேசியிருந்தார்.

அதில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதலமைச்சர் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேசினார். “அனைத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்தான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் தெரிவித்தார். மேலும் “எவ்வளவு முதலீடுகள், எவ்வளவு வேலை வாய்ப்புகள் என்பது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயலாக்கம் குறித்து வெளிப்படைத்தன்மை உடன் கூற வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

விஜய்யின் லண்டன் பயணத்தின் மீதான சர்ச்சை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு “முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. அதுகுறித்து பேசினால் என் மீதே வழக்குப்பதிவு செய்வார்கள்” என்றும்  முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? என்றும் க்ளெவி எழுப்பினார். துக்ளக் தர்பார் போன்றுதான் தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளது என்று குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பது போல தவெக அமைச்சர்கள் செயல்படுவதாகவும் விமர்சித்தார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்சனை உள்ளதாகவும், “ஆனால் மின்வெட்டு இல்லை” என அமைச்சர் பொய் சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்தான கேள்விக்கு, “லூப் சாலை மற்றும் சாந்தோம் சாலை பகுதிகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதாகவும், அந்தப் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் தேவைப்படும் நிலையில், அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில் தலைமைச் செயலகம் அமைக்க அரசு முயற்சித்தால், அதற்கு மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தயங்கமாட்டார்கள் என்றும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கள அளவில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அரசு தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும், சென்னை ராஜ்பவன் பகுதியில் உள்ள நிலப்பரப்பை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வாய்ப்புகளை அரசு பரிசீலிக்கலாம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அரசின் கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில், புதிய கட்டுமானத்திற்காக பெருமளவு நிதி செலவிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பதை வைத்து சிறப்பாக நிர்வகிப்பதுதான் நல்ல நிர்வாகம்; தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து மௌனம் காக்காமல், தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்