மதுரை- குவாயூா் ரயிலில் வியாழக்கிழமை முதல் (அக்.22) கண்ணாடி இழையிலான பெட்டிகள் (விஸ்டாடோம்) இணைக்கபட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், இந்த விஸ்டாடோம் பெட்டியில் பயணம் செய்வதற்கான அடிப்படைக் கட்டணம் ரூ.515 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து குருவாயூர் வரை முழுமையாகப் பயணம் செய்வதற்கான மொத்தக் கட்டணம் ரூ.1,875 ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை - குருவாயூர் இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16327 / 16328) ரயிலில் இணைக்கப்பட்டுள்ள இந்த விஸ்டாடோம் பெட்டி, பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பெட்டியின் மிக முக்கியச் சிறப்பம்சமாக பயணிகள் அமரும் இருக்கைகளை 360 டிகிரி கோணத்தில் சுழற்ற முடியும் என்பதாகும். ரயில் செல்லும் திசைக்கோ அல்லது ஜன்னல் வழியாக வெளியே தெரியும் இயற்கைக் காட்சிகளையோ பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையைத் திருப்பி அமர்ந்து கொண்டே ரசிக்கும் ஒரு அழகிய அனுபவத்தை இது தரும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்,முழுமையாகக் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த இரயில், பயணிகள் தங்கள் கைபேசி மற்றும் மடிக்கணினிகளைச் சார்ஜ் செய்ய ஒவ்வொரு இருக்கையிலும் தனியான சார்ஜிங் பாயிண்டுகள் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும், கட்டாயம் இது உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை தரும் என்றும் இது சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் என்றும் பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ரயில் தொடக்க விழாவில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "தென்னக இரயில்வேயில் முதன்முறையாக மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் காட்சி வடிவப் பெட்டி (விஸ்டாடோம் பெட்டி) அறிமுகம்!
இமயமலைப் பகுதியின் இயற்கை எழில் சார்ந்த கல்கா - சிம்லா (ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ்), மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியான மும்பை - மட்கான் (கோவா வழித்தடம்), கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள விசாகப்பட்டினம் - அராக்கு பள்ளத்தாக்கு வழித்தடம் போன்று, மிகச்சிறப்பான இயற்கை எழில் சார்ந்த செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் இரயிலில் காட்சிப் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய இரயில்வே ஆலோசனைக்கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதனை ஏற்ற இரயில்வே வாரியம், சோதனை ஓட்டத்தை மூன்று மாதம் நடத்த ஏற்றுக்கொண்டு அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடக்க நாள் இன்று. இன்றைய பயணத்தில் பங்கெடுத்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த நிகழ்வில் பொறுப்பு மேயர் நாகராஜன் மற்றும் இரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்" என்று தனது X தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.