தமிழ்நாடு

அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் குட் நியூஸ்! 60% ஆக உயர்ந்த அகவிலைப்படி.. மகளிர் உரிமைத்தொகை அப்டேட்?

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக

Muthu Lakshmi

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி (DA) 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன், முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்குதல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 12,000 பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அடிப்படையில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பரில் 55 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 58 சதவீதமாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வரும் தமிழக முதலமைச்சர் விஜய், முந்தைய அரசின் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.