தமிழ்நாடு

"அடுத்த 15 ஆண்டுகளுக்கு.." அரசியல் பேசிய ஜி.வி. பிரகாஷ்!

ஏற்கனவே பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தனது குரலைத் தந்து வரும் அவர், தற்போது நேரடி அரசியல் குறித்தும் சூசகமாகப் பேசியுள்ளார்...

மாலை முரசு செய்தி குழு

சென்னையில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் கர்நாடக இசை கச்சேரிகளுக்கு மாற்றாக, விளிம்புநிலை மக்களின் இசையையும், பறை உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளையும் கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த மேடை தனக்கு மிகவும் நெருக்கமானது என்றும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதில் கலந்து கொள்வதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். பணபலம் இல்லாத எளிய கலைஞர்களுக்கு இந்த மேடை ஒரு பெரிய அங்கீகாரத்தை அளிப்பதாகவும், அவர்களின் குரல் உலகெங்கும் ஒலிக்க இது ஒரு வாய்ப்பாக அமைவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், பா. ரஞ்சித் உருவாக்கிய 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவிற்கு தனது முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றும் உறுதியளித்தார்.

தனது பேச்சின் இடையே ஜி.வி. பிரகாஷ் குமார் அரசியல் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். வரவிருக்கும் காலம் அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, "அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அரசியலில் இது மிகத் தீர்மானகரமான ஆண்டாக இருக்கப்போகிறது. வரப்போகும் தேர்தலில் மிகக்கடுமையான போட்டி நிலவும்" என்றார்.

பொதுவாக இசை மேடைகளில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கும் கலைஞர்களுக்கு மத்தியில், ஜி.வி. பிரகாஷ் குமார் வெளிப்படையாகத் தேர்தல் களம் குறித்தும், அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தனது குரலைத் தந்து வரும் அவர், தற்போது நேரடி அரசியல் குறித்தும் சூசகமாகப் பேசியுள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இந்த முன்னெடுப்பை வெகுவாகப் பாராட்டினர். கலை என்பது சமூக மாற்றத்திற்கான கருவி என்பதை உணர்த்தும் வகையில், பறை இசை முழங்கத் தொடங்கிய இந்த விழா, மக்களிசையின் மகத்துவத்தை உணர்த்தும் ஒரு கலாச்சாரத் திருவிழாவாக மாறியுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷ் பேசிய அரசியல் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்