மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழ்நாட்டில் அரசியல் புயலை கிளப்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் தமிழக முதலமைச்சர் உடனடியாக கர்நாடகா முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
"மேகதாது விவகாரத்தை என்னிடம் கேட்காதீர்கள். அந்த மாநில முதலமைச்சர் தீர்மானமாக இருக்கிறார். இந்த மாநில முதலமைச்சரிடத்தில் அதற்கு என்ன பதில் வைத்திருக்கார் என்பதை கேளுங்கள்.
அதே காங்கிரஸ் தயவில் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருப்பது யாரு?
தண்ணி தரவே மாட்டேன்னு சொல்ற காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?
உரிமைகளை பறிக்கிற ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு என்ன காப்பாத்துவீர்கள்?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை எந்த மாநிலம்? கர்நாடகா. அவர் என்ன பண்ணி விடுவார்?
என்னிடம் கேட்டா நான் என்ன சொல்வது? நான் ஜீரோ. ஹீரோவிடம் போய் கேளுங்கள்." என பதிலளித்தார்.
"இப்போது முதலமைச்சர் எதையும் சொல்வது இல்லை. செயலில் காட்டுகிறார்கள் என்று சொல்கிறார்ககளே" என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, "அப்படி செயலில் காட்டிய ஏதாவது ஒரு செயலை இப்போது காட்டுங்கள்?" என கொதித்தார் சீமான்.
தொடர்ந்து, "செஞ்சியில் குழந்தை காணாமல் போய்விட்டது கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு ஐஏஎஸ் பெண் ஆபீசர் மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் இப்படி மெசேஜ் அனுப்பியதாக சொல்கிறார்கள்.
அவர் அனுப்பவில்லை என்கிறார், எனில் மாவட்ட ஆட்சியர் பொய் சொல்கிறாரா?
ஒரு துணை சபாநாயகர் புகாருக்கு வந்த குடிமகனை எப்படி நடத்தினார் என்பதையும் பார்த்தோம்.
அவ்வளவு பெரிய சபையை வழிநடத்தும் ஒரு துணை சபாநாயகர், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கிறார்? அவர் எப்படி நடந்துகிட்டார்?
முதலில் இந்த பொறுப்புக்கு தகுதியில்லை என கூறி பொறுப்பிலிருந்து கூட நீக்க தைரியம் இல்லைன்னா நீங்கள் என்ன தூய சக்தி? அது என்ன ஒரு தலைமை?
பல பேரை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் இந்த அருள் விக்னேஷை (கள்ளக்குறிச்சி MLA) தகுதி நீக்கம் செய்ய முடியாதா?
தகுதி நீக்கம் செய்துவிட்டு மறுபடியும் தேர்தல் வைத்தால் ஜெயிக்க முடியாதா?
அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் என்ன பெரிய ஹீரோ? என்ன பெரிய மாஸ் லீடர்?
மக்களை சந்திக்க ஏன் பயப்பட வேண்டும்?
வென்றால் தான் களத்தில் இருக்க முடியும். தோற்றால் ஓடிப்போய் விடுவீர்கள் என்பது என்ன? தோற்றாலும் களத்தில் இருக்க வேண்டும்.
ஆட்சி செய்வதற்கு பெரும்பான்மை முக்கியமில்லை. உண்மையும் நேர்மையும் தான் முக்கியம்." என்றார்.
"பள்ளி குழந்தைகளுக்கு அளித்த வாழ்த்து அட்டையில் நேரு மாமா புகைப்படம் இல்லையே" எனக் கேள்வி கேட்டபோது, "அதான் பொட்டு மாமா இருக்காருல" என கடுப்பாக பதிலளித்துவிட்டு புறப்பட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.