தமிழ்நாடு

“மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்” - 'தனிஷ்க்' கொள்ளை வழக்கில் 'Trial' பார்த்த திருடன்… சிக்கியது எப்படி?

"தனது அடையாளத்தை மறைத்து தினமும் வந்து சென்ற கொள்ளையன், எந்த அடையாளமும் தடயமும் கிடைக்காமல் தப்பி சென்றுள்ளார்.."

Muthu Lakshmi

மதுரை பைபாஸ் சாலையில் 15 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட பிரபல ‘Tanishq’ நகைக்கடை ஷோரூமில், சுமார் 500 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாக நேற்று புகார் எழுந்தது. இந்த கொள்ளை தொடர்பான முதற்கட்ட விசாரணையில் தனி நபர் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகை பொருட்கள் கொள்ளை போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் கடந்த ஒரு வாரமாக கடையை நோட்டமிட்டு வந்ததும், தப்பிச் செல்வதற்காக ட்ரயல் பார்த்ததும் தெரியவந்தது. கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறை, தற்போது கொள்ளையனை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த நபர் என தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்வதில் மும்முரமாகியுள்ளது காவல்துறை.

நகை கடைக்கு நகை வாங்குவது போல நடித்து, தொடர்ந்து  கண்காணித்து கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார். கையில் கட்டுடனும், தலையில் தொப்பியுடனும் நகைக் கடைக்குள் நகை வாங்குவது போல கண்காணித்து, அடுத்தடுத்த நாட்களில் கடை முழுவதையும் கண்காணித்தது, சிசிடிவி காட்சி மூலமாக தெரியவந்துள்ளது

நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் தொடர்ந்து நகை கடையை  இரவு பகலாக கண்காணித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எந்தவித அடையாளமும் தென்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொப்பி அணிந்த படி, கேமரா பதிவுகளில் சிக்காமல் கடைக்குள் வந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. கடையில் லிப்ட் வேலை செய்யாதது குறித்தும் இரண்டு மற்றும் மூன்றாவது தலங்களில் எந்த செயல்பாடும் இல்லை என்பதும், அங்கு பணிகள் நடைபெற்று வருவதையும் கண்காணித்து வந்த கொள்ளையன், கடந்த 5ஆம் தேதியன்று கொள்ளை முயற்சிக்காக Trail பார்த்ததும் தெரியவந்துள்ளது. தனது அடையாளத்தை மறைத்து தினமும் வந்து சென்ற கொள்ளையன், எந்த தடயமும் கிடைக்காமல் தப்பி சென்றுள்ளார்.

தனி ஒருவனாக பல நாட்களாக நகைக்கடையை நோட்டமிட்டு மொத்தமாக நகைகளை கொள்ளையடித்து மூட்டையில் அள்ளிச் சென்ற கொள்ளையன், ஒவ்வொரு நகைகளாக பார்த்து ரசித்து வாடிக்கையாளர் போல தேர்வு செய்த நிலையில் கொள்ளையடிக்க வந்த போது தான் தேர்வு செய்த நகைகளை தேடித்தேடி கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் விதவிதமான ஆடைகளில் வித விதமான கெட்டப்பில் வந்து கண்காணித்தவர், வேவு பார்த்த நாள் முதல் கொள்ளையடித்த நாள் வரை ஒரே நிற தொப்பியை மட்டும் அணிந்தது முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. “மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்” என்பது போல தொப்பியை மாற்றாமல் சிக்கிக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.