“நகை கடை திறந்த 15 நாட்களில்.. 500 சவரன் கொள்ளை” - பூட்டை உடைத்து கைவரிசை.. மதுரை வியாபாரிகள் அச்சம்!

கடையில் இருந்த மொத்தப் பொருட்களில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளது
madurai Tanishq
Published on: 
Updated on: 
1 min read

மதுரை பைபாஸ் சாலையில் ‘Tanishq’ பிரபல நகைக்கடை ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தபோது, கடையின் பின்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சுமார் 500 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க வழியாக சென்று சுவர் மற்றும் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகை பொருட்கள் கொள்ளை போயுள்ளதாக முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், துணை காவல் ஆணையர்கள் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் கூறுகையில், மூன்று நபர்கள் சுவர் மற்றும் கதவை உடைத்து கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்த மொத்தப் பொருட்களில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.