Kallakurichi Collector complaint 
தமிழ்நாடு

"தவெக MLA மீது புகாரளித்தாரா கள்ளக்குறிச்சி ஆட்சியர்?.. பூதகரமாகும் ஆபாச மெசேஜ் விவகாரம்! அரசு தரப்பு சொன்னது ஒன்று.. வெளியான தகவல் வேறு!

மாவட்ட ஆட்சியர் அத்தகைய புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறிய நிலையில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vinvizhi Leninton

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக MLA ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக புகாரளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே "எந்த ஒரு புகாரும் ஆட்சியர் அளிக்கவில்லை" என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் தற்போது mavமாவட்ட ஆட்சியர் புகாரளித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் அவரது வீட்டிற்கு போதையில் சென்று தகராறில் ஈடுபட்டது தொடர்பாக தவெக MLA அருள் விக்னேஷ் மீது புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அருள் விக்னேஷ் தான் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்று கூறிவந்தார். ஆனால், முதல்வர் விஜய் அவரை கட்சிக்காரர்களுக்காக கூட்டிய கூட்டதில் அருள் விக்னேஷை தனியாக அழைத்து கண்டித்ததாக தகவல்கள் கசிந்தன. தவெக MLA அருள் விக்னேஷ் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்றால் ஏன் முதல்வர் கண்டித்தார் என்று அரசியல் வட்டரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், "மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாரா?" என்று கேள்வி எழுப்பியதுடன், குற்றச்சாட்டுகளை ஆதரிக்க உறுதியான ஆதாரங்களையும் கோரியது. இந்நிலையில், "மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை" என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், அருள் விக்னேஷ் தன் மீது சுமத்தபட்ட இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். அவை தன்னையும் தன் கட்சியையும் அவதூறு செய்யும் நோக்கில் ஆதாரமற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சிகளே என்றும் அவர் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் விஜய் விக்னேஷை கண்டித்தார் என்று கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்களாக எதுவும் அக்கட்சி சார்பிலோ அல்லது முதல்வர் விஜய் சார்பிலோ வெளியிடப்படவில்லை. இந்த மௌனமே எதிர்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து காட்டமாக விமர்சிக்க காரணமாக அமைந்தது.

இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற 'பணியிட பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு' நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, இந்தக் குற்றச்சாட்டுகளைப் பணியிடத் துன்புறுத்தலுக்கான உதாரணமாகக் குறிப்பிட்டதோடு, காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார் என 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, தவெக MLA அருள் விக்னேஷ் மீதான புகார் உண்மையானதா? இல்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட நிலையில், தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்துள்ளது.

இந்நிலையில், மாணிக்கம் தாகூர் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில், 'The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில், மாவட்ட ஆட்சியர் அத்தகைய புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறிய நிலையில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்