கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மதுபோதையில் ஆட்சியர் வீட்டிற்குச் சென்றதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல்லா ரகுமான், அருள் விக்னேஷுக்கு எதிராகப் புகார் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, எம்எல்ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் தரப்பிலும் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அரசியல் தலையீடு இல்லாமல் பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ள ஆணையம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். புதிய பேருந்து நிலையம் தொடர்பான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சூழலில், ஆந்திர கடற்கரையில் புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவ குடும்பங்களுக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று(நவ 17) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “எம்எல்ஏ இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதை வைத்தே இந்த விவகாரம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. வெயிட் அண்ட் சீ” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தப் பதில், எம்எல்ஏ அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு, எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில், அருள் விக்னேஷ் மீது கட்சித் தலைமை அல்லது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.