TVK MLA Arul Vignesh 
தமிழ்நாடு

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பதவி விலக முடிவா?” - ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் தொடரும் விசாரணை.. நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள்!

ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால்...

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது.

மேலும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, கடந்த நவம்பர் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர் முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து எம்எல்ஏ தரப்பிலோ அல்லது கட்சி தலைமையிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே, இந்த வழக்கை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரிக்கவும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி விசாரணையை கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து வரும் நவம்பர் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், இறுதி விசாரணை அறிக்கையை டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாசமான பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் பரவினால் அவற்றை நீக்குவதற்கும் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் நிலவும் நிலையில், ஆட்சியரின் புகார் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்