மலேசியாவில் நடந்த விஜய்யின் 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் நிகழ்வு குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன், "தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய நிலையைப் பற்றிப் பேசும்போது, முதலில் நமக்குத் தெரிவது ஒரு விதமான வியாபார அரசியல் தான். நடிகர் விஜய் அவர்கள் தற்போது தனது 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியாவிற்குச் சென்றுள்ளார். அங்கே 80,000 பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடக்கிறது. "ஒன் லாஸ்ட் டைம்" (One Last Time) என்று ரசிகர்கள் இதைக் கொண்டாடினாலும், ஒரு அரசியல்வாதியாக அவர் ஏன் மலேசியாவிற்குச் செல்ல வேண்டும்? இங்கேயே ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்தியிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியும், பொருளாதாரமும் இந்தியாவிற்கு வந்திருக்கும்.
ஆனால், அங்கே போனால் "ரிங்கிட்" மலேசியாவில் (Malaysian Ringgit) கல்லா கட்டலாம் என்ற வியாபாரத் திட்டம் தான் தெரிகிறது. அவர் இன்னும் முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை; ஒரு உச்சகட்ட வியாபாரியாகவே இருக்கிறார். அரசியலில் அவர் தோற்றுவிட்டால், இந்தப் படமே அவரது கடைசிப் படமாக இருக்காது, மீண்டும் நடிக்க வந்துவிடுவார்.
கட்சியின் உட்கட்சி விவகாரங்களைப் பார்த்தால் அது இன்னும் வேதனையாக இருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா என்ற பெண் நிர்வாகி, தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் விஜய் அவர்கள் இறங்கி வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு 20 வினாடிகள் பேசியிருக்கலாம். ஆனால், அவரைப் பவுன்சர்களை (Bouncers) வைத்துத் தள்ளிவிட்டுவிட்டு, விஜய் பாட்டுக்குத் தனது காரில் ஏறி மலேசியாவிற்கு 'வைப்' (Vibe) பண்ணப் போய்விட்டார். தன் சொந்தக் கட்சிக்காரர்களின் நலனைக் கூடப் பாதுகாக்க முடியாத ஒருவரால் எப்படி மக்களைப் பாதுகாக்க முடியும்? அரசியலில் 41 பேர் இறந்து போனபோது ஓடி வந்தவர், இப்போது அஜிதா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது மலேசியாவில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இதுவா ஒரு அரசியல் தலைவருக்கு அழகு?
அண்ணா திமுக இப்போது அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கிவிட்டது. அண்ணா திமுகவின் ரவி குழந்தைவேலு பேசும்போது, விஜய்யை "யுகேஜி" (UKG), "எல் கே ஜி" (LKG) மாணவர் என்று கிண்டல் செய்கிறார். அதிமுக என்ற கட்சி பிறக்கும்போது விஜய் பிறந்திருக்கவே மாட்டார். ஒரு ஐஆர்எஸ் (IRS) அதிகாரியைத் தன் பக்கம் வைத்துக் கொண்டு தூய ஆட்சி தருவதாகப் பேசுகிறார் விஜய். உங்கள் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்தபோது எவ்வளவு பணம் பிடிபட்டது, உங்கள் சொத்துக்களின் தரவு என்ன என்பதை ஏன் இன்னும் வெளியே சொல்லவில்லை? கார் வாங்கியதற்கு முறையாக வரி கட்டாதவர் எப்படி நாட்டைத் திருத்தப் போகிறார்?
அரசியல் களத்தில் இப்போது திமுக, அதிமுக, பாஜக மற்றும் சீமான் என அனைவரும் சேர்ந்து விஜய்யை "பேயடி" அடிக்கக் காத்திருக்கிறார்கள். தேர்தலில் பூத் (Booth) வேலை பார்ப்பதற்கு ஆட்கள் வேண்டும். திமுகவிலும் அதிமுகவிலும் பலமான கட்டமைப்பு உள்ளது. ஆனால், தவெகவில் இருப்பது வெறும் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடும் கூட்டம் தான். சீமான் அவர்கள் விஜய்யைக் "கரகாட்டக் கோஷ்டி" என்று வர்ணிக்கிறார். ஏற்கனவே "கற்குறி அணில்" என்று பெயர் வைத்தவர் இப்போது புதிய பட்டம் கொடுத்துள்ளார். திராவிடக் கட்சிகள் ஊழல் செய்கின்றன என்று விஜய் விமர்சிக்கிறார், ஆனால் அத்தகைய கட்சிகளில் இருந்து வருபவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். இது எத்தகைய கொள்கை?
விஜய் அவர்களின் அரசியல் என்பது ஒருவிதமான "ஷோ அரசியல்" (Show Politics). பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டார், தொண்டர்களுடன் பழக மாட்டார், மக்களுடன் நேரடித் தொடர்பு கிடையாது. தனி விமானத்தில் பறப்பவரால் சாமானிய மனிதனின் வலியை எப்படி உணர முடியும்? ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வயதான காலத்திலும் கூடத் தனது வாசலில் தொண்டர்களுக்குப் பிரச்சனை என்றால் நேரில் வந்து விசாரிக்கிறார். ஆனால், விஜய் அவர்கள் ஒரு பெண் தொண்டர் தனது காரை மறித்ததற்கே அவரைத் தள்ளிவிடச் சொல்கிறார்.
இறுதியாக நான் சொல்வது இதுதான்: விஜய் அவர்கள் தனது "கோல்டன் பீரியடை" (Golden Period) கடந்துவிட்டார். இனிமேல் அவர் கூட்டணிக்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை. மார்ச் மாதத்திற்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது பல உண்மைகள் வெளிவரும். தேர்தலில் மக்கள் அவர் முகத்திற்காக ஓட்டுப் போடுவார்கள் என்று நினைப்பது தவறு. உள்ளூரில் எம்.எல்.ஏ அவசரத்திற்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். விஜய் அவர்களைத் தேர்தல் களத்தில் மற்ற கட்சிகள் சேர்ந்து எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். மே மாதம் தேர்தல் முடிவுகள் வரும்போது அவர் "கோல்டு மெடல்" வாங்குவாரா அல்லது "பெயில்" (Fail) ஆவாரா என்பது தெரிந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.