மணிசங்கர் அய்யர் மணிசங்கர் அய்யர்
தமிழ்நாடு

விஜய்யுடன் கைகோர்ப்பதா? காங்கிரஸின் முடிவு 'அரசியல் முட்டாள்தனம்' - சொந்தக் கட்சியையே வெளுத்து வாங்கிய மணிசங்கர் அய்யர்!

கடந்த தேர்தலில் விஜய்யை எதிர்த்துவிட்டு, இப்போது அவருடன் கைகோர்ப்பது மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் எடுத்த முடிவுக்கு, அந்தக் கட்சியினுள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், தனது சொந்தக் கட்சியின் இந்த நடவடிக்கையை "மிகவும் மோசமானது" என்றும், இது ஒரு "தரம் குறைந்த அரசியல் சந்தர்ப்பவாதம்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த தேர்தலில் விஜய்யை எதிர்த்துவிட்டு, இப்போது அவருடன் கைகோர்ப்பது மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், இதுபோன்ற லாப நோக்கத்திற்காகச் செய்யப்படும் அரசியல் காங்கிரஸை முன்னேற்றாது என்று கூறினார். காங்கிரஸ் கட்சி மற்ற சிறிய கட்சிகளும் விஜய்யை ஆதரிக்கும் என்று தவறாகக் கணக்குப் போட்டுவிட்டதாகவும், ஆனால் ஆரம்பத்தில் அது நடக்காததால் விஜய் பெரும்பான்மை பெற காங்கிரஸ் உதவ முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார். "நாங்கள் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் ஒழுக்கக்கேடான அரசியலைச் செய்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலை உருவாக்கி ஒரு அரசியல் முட்டாள்தனத்தையும் செய்துள்ளோம். தமிழக சட்டசபை இப்போது ஒரு தொங்கு நிலையை எட்டியுள்ளது, நாங்களும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று முன்னாள் மத்திய அமைச்சரான அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, மற்ற சிறிய கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழில் கட்டுரை எழுதியுள்ள மணிசங்கர் அய்யர், "காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்றது அதன் சொந்த பலத்தால் அல்ல, பல ஆண்டுகளாக திமுகவுடன் வைத்திருந்த கூட்டணியின் பலத்தால் தான்" என்று உண்மையை உடைத்துள்ளார். காந்தியின் காங்கிரஸ் பேசும் 'உண்மை அரசியல்' இதுவல்ல என்றும் அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருங்கால தேர்தல்களில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கும் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். விஜய்யின் இந்த ஆட்சி ஒருவேளை பாஜக போன்ற கட்சிகள் தமிழக அரசியலுக்குள் நுழைய வழிவகுத்துவிட்டால், அது காங்கிரஸே தனக்குத் தானே அடித்துக் கொண்ட 'ஓன் கோல்' (Own Goal) ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளார். "இனி யாராவது நம்மைக் கைதூக்கி விடுவார்களா?" என்றும் அவர் கவலையுடன் கேட்டுள்ளார். இதற்கிடையில், காங்கிரஸின் இந்தத் திடீர் பல்டிக்கு "முதுகில் குத்தும் வேலை" என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 108 இடங்களை வென்றுள்ள விஜய்க்கு, காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2) மற்றும் சிபிஎம் (4) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பது இப்போது உறுதியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.