மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் தொகுதியில் களமிறங்கினார். தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். 35 முக்கிய இடங்களில் மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளரான பெ. சண்முகம் முதல்வர் விஜய்யின் ரோடு ஷோ குறித்து பேசினார்.
அதில் அவர், "தேர்தலில் வாக்குகளுக்கு பணம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் தூயசக்தியே நாங்கதான் என்று தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. ஜோசப் விஜய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லுகிற வாக்குமூலத்திற்கு நேர் எதிராக இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பது என்பது அவர்களுடைய தூயசக்தி என்கிற அந்த அடையாளத்தை அழித்தொழிக்கக்கூடிய காரியமாக இருக்கிறது. அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்".
"சட்டப்பேரவை தேர்தலின் போது நிறைய பிரச்சாரத்தை அறிவித்தார்கள், அதில் அறிவித்து போனதை விட 'கேன்சல்' செய்ததுதான் அதிகம். ஆனால், இந்த முறை தாராபுரத்திற்கே இரண்டு முறை செல்கிறார். நாளை மறுநாள் மீண்டும் தாராபுரத்திற்கு செல்கிறார். இன்றைய தினம் 'தெருத்தெருவாக செல்கிறார்' என்று சொல்லலாம் மதுராந்தகத்தை பொறுத்தவரை.
39 இடங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று தகவல் வந்திருக்கிறது. அந்த அளவிற்கு காலம் கடுமையாக இருக்கிறது. தவெக-விற்கு சாதகமாக தேர்தல் களம் இல்லை என்ற காரணத்தினால்தான் முதலமைச்சர் இப்படி தெருத்தெருவாக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது".
"ஆனால், நிச்சயமாக போட்டி கடுமையாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் நடைபெற்று, வெற்றி பெற்று, பதவி ஏற்றதோடு சரி. அதன்பிறகு அவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்லவே முடியாத வகையில் 20 நாட்களுக்குள் அவர்கள் ராஜினாமா செய்தது என்பது தொகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
'இவர்களுக்கு நம்பி வாக்களித்தோம், இவர்கள் பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்துவிட்டார்களே' என்கிற கடும் கோபம் இரண்டு தொகுதி மக்களிடையேயும் இருக்கிறது. அதன் விளைவாகதான் வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் அவர்களை விரட்டியடிக்கும் நிகழ்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது".
"இவர்கள் செய்தது ஒரு நெறிமுறையற்ற செயல். எந்த வரைமுறைக்குள்ளும் இவர்களது நடவடிக்கையை ஒப்பிடமுடியாது. இப்படி ஒரு சம்பவத்தை நாம் கேள்விப்பட்டதும் இல்லை. ஆகவே, இந்த தேர்தல் என்பது தேவையில்லாமல் தவெக-வினால் உருவாக்கப்பட்டிருக்கிற, திணிக்கப்பட்டிருக்கிற தேர்தல். ஏனெனில் தவெக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றால் இவர்கள் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பே கிடையாது.
அவர்கள் (ராஜினாமா செய்தவர்கள்) அப்படியே, கொள்கை உருவாக்குகிற.. உயர்மட்டத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் கிடையாது. சராசரி அதிமுக உறுப்பினர்கள். அவர்களை எப்படியாவது இழுத்துக்கொள்வது மூலமாக அவர்களுக்கு பெரும்பான்மையை உருவாக்கி கொள்வது என்கின்ற நோக்கத்தோடுதான் தவெக தரப்பில் இருந்து கொடுத்த உறுதிமொழியின் காரணமாகத்தான் இந்த இடைத்தேர்தல் என்பதே வந்திருக்கிறது. ஆகவே இயல்பாகவே மக்கள் மத்தியில் கோபம் இருந்திருக்கிறது".
எதிர்க்கட்சியில் இருந்தால் எந்த திட்டத்தையும் செய்யமுடியாது, அதனால்தான் ஆளும்கட்சிக்கு சென்றோம் என்று தவெக-வில் இணைந்தவர்கள் கூறுவதாக நிரூபர் கேட்ட கேள்விக்கு, "எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற தொகுதிகளில் அரசாங்கம் எதுவும் செய்யாதா?. நிதி ஒதுக்கீடு செய்யாதா? திட்டங்கள் ஏதும் வராதா?.
இதை முதலமைச்சரை வைத்துக்கொண்டுதான் கூறியுள்ளார்கள். அதனால், தமிழ்நாடு முதல்வர் விஜய் இதற்கு உரிய விளக்கத்தை தரவேண்டும்" என்று பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்