மதுராந்தகத்தில் விஜய்யின் ரோடு ஷோ.. மரகதத்துக்காக களமிறங்கிய முதல்வர்! தேர்தல் பிரச்சாரத்தின் கிளைமாக்ஸ்?

தற்போது இரண்டாவது முறையாக தொகுதிக்கு வரும் அவர், இந்த முறை பொதுக்கூட்டத்தைத் தவிர்த்து நீண்ட தூர ரோடு ஷோ மூலம் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்
CM vijay roadshow
Published on: 
Updated on: 
2 min read

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் தொகுதியில் களமிறங்கியுள்ளார். தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார். 35 முக்கிய இடங்களில் மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் அக்டோபர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய கட்சிகள் தங்களது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

CM vijay roadshow

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜய் ஏற்கெனவே செப்டம்பர் 25ஆம் தேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தொகுதிக்கு வரும் அவர், இந்த முறை பொதுக்கூட்டத்தைத் தவிர்த்து நீண்ட தூர ரோடு ஷோ மூலம் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

மாமண்டூரில் தொடங்கும் இந்த ரோடு ஷோ, படாளம், கருங்குழி, மதுராந்தகம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக நடைபெறுகிறது. பிரச்சாரத்தின் இடையே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திலும் விஜய் வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோடு ஷோவையொட்டி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக மற்றும் தவெக இடையேயான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த நீண்ட தூர ரோடு ஷோ, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கான இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com