மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான சங்கர். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். சங்கர் இன்று சீர்காழி அருகே உள்ள புத்தூர் அரசு கல்லூரி எதிரே உள்ள டீக்கடையில் டீ வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தை திடீரென தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி உள்ளார். அப்போது சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தடுக்க பேருந்தை திருப்பி உள்ளார். எனினும் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து இருசக்கர வாகன மீது மோதி இழுத்து சென்றது.
மேலும் அதே நேரத்தில் சாலையோரம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளரான புத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சரண்யா என்பவர் மீதும் மோதி பேருந்து வலது புறம் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து வீட்டில் மோதி நின்றது. இந்த விபத்தில் தூய்மை பணியாளர் சரண்யா, தொழிலாளி சங்கர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இந்த கொடூர விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து சீர்காழி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பேருந்து அடியில் சிக்கி இருந்த தூய்மை பணியாளர், செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இருவரின் உடலையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
அரசு கல்லூரி அருகே நிகழ்ந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சிதம்பரம் சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் அரசு கல்லூரி அருகே சில மாதத்திற்கு முன்பு லாரி மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.