Su Venkatesan Justice Swaminathan controversy 
தமிழ்நாடு

"பென்ஸ் கார்.. பிராண்டட் செருப்பு" - சு. வெங்கடேசனை சீண்டிய நீதிபதி! புத்தக ஊழல் தொடங்கி.. அடுத்தடுத்து வெடித்த வார்த்தை போர்

சு. வெங்கடேசன் ஒரு உயர் ரக மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், பிராண்டட் ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.

Vinvizhi Leninton

தனது நீதித்துறைப் பொறுப்புகள் குறித்துக் கருத்து தெரிவித்த சிபிஐ(எம்) முக்கிய தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திங்களன்று (நவ 16) கடுமையாகச் சாடினார். அதில் அவர், சு. வெங்கடேசன் மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் பயணம் செய்ததையும், பிராண்டட் ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருந்ததையும் நீதிபதி சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவரது இந்த கருத்துக்கு சு. வெங்கடேசன் தனது பதிலினையும் அளித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்காக வாங்கப்பட்ட புத்தகங்கள் மோசடியாகக் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து, சமீபத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்துகளை வெங்கடேசன் விமர்சித்தார். அதிலிருந்து இந்த வார்தைப்போர் தொடங்கியது.

நீதிபதியின் சர்ச்சை கருத்து:

பெரியார் அறிவுலகத்தில் எல்லாமே அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்தான் இருக்கிறது என்றும் அந்த பாவங்கள் கழிய வேண்டும் என்றால் மகா பெரியவா புத்தகங்களை அதாவது அதனை தொகுப்புகளையும் காலியாக உள்ள பெரியார் அறிவுலக நூலகத்தின் அத்தனை அலமாரிகளும் வைத்தால்தான் இந்த அப்பாவும் போகும் என்று மனதார நம்புவதாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய அந்த வீடியோவை பகிர்ந்து, சு. வெங்கடேசன் தனது X தளப்பக்கத்தில், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என்று அவர் நீதிபதியின் சர்ச்சை கருத்துக்கு தனது பதிலில்லை அளித்திருந்தார்.

சொகுசு கார்.. பிராண்டட் செருப்பா..?:

இதனையடுத்து, திங்கட்கிழமை நூலகத்தில் ஆன்மீக நூல்களை வைப்பது குறித்த தனது யோசனை ஒரு நகைச்சுவையாக மட்டுமே கூறப்பட்டது என நீதிபதி சுவாமிநாதன் தெளிவுபடுத்தினார். மேலும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறுவதற்கு முன்னர், சென்னை ரயில் நிலையத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினரைத் தற்செயலாகச் சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

சு. வெங்கடேசன் ஒரு உயர் ரக மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், பிராண்டட் ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் தோற்றமானது, ஆரம்பத்தில் ஒரு பெருநிறுவன நிர்வாகி என்று தன்னை நம்ப வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஆடம்பரக் காரில் பயணம் செய்து, பிராண்டட் பொருட்களைப் பயன்படுத்துவதாக நீதிபதி சுவாமிநாதன் குறிப்பிட்டார். மேலும், புத்தகங்கள் மூலமான வரும் ராயல்டி வருமானம் இத்தகைய வாழ்க்கை முறையைத் தாங்க முடியுமா? என்றும் அவர் வியந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரயிலை நோக்கி நடந்து சென்றபோது நடந்த அவர்களின் சுருக்கமான உரையாடலை நினைவு கூர்ந்த நீதிபதி, வெங்கடேசன் வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் வேளையில், அன்று ஃபர்ஸ்ட் ஏசி வகுப்பில் பயணம் செய்ததாகக் குறிப்பிட்டு கூறியுள்ளார். நீதிபதி சுவாமிநாதனின் கூற்றுப்படி, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவரிடம் எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, தான் வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வதாகவும், தனது படுக்கை எண் S3-23 என்றும் அவர் பதிலளித்துள்ளார். ஒரு நீதிபதியாகத் தனது கடமைகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்று வெங்கடேசன் தனக்குக் கூறியதற்கு ஆட்சேபனை தெரிவித்து, நீதிபதி சுவாமிநாதன் தனது பதிலை கூறி முடித்துள்ளார்.

சு. வெங்கடேசன் சொகுசு கார் மற்றும் பிராண்டட் ஆடைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நீதிபதி சுவாமிநாதனின் கருத்துக்களுக்கு சு வெங்கடேசன் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர், "ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது. நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.

அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது. இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது. நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.

இக்கேள்வி "தூய்மை மற்றும் எளிமை" எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது

எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை" என்று அவர் பதிலடி கொடுத்திருந்தார்.

நீதிபதியை சுற்றி வந்த சர்ச்சை:

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 2025 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் அளித்தனர். அதற்கு காரணமாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், 'டிசம்பர் 3 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும். தவறினால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்குச் சென்ற இந்து அமைப்பினருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், போலீஸாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எப் (CISF) வீரர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார். எனினும் காவல்துறை இதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து, ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பின்னர், இந்த விவகாரத்தில், 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை முன்வைத்தன. அதன் பின்னர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 2025 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் இவர் சர்ச்சையில் சிக்கியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அரசு தரப்பில் MP-க்கு தரப்படும் பயணச் சலுகையை குறிப்பிட்டு அவர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.