நிரந்தர வேலைவாய்ப்பு, வேலைப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் நேற்று இரவு (அக் 05) கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசை வன்மையாகக் கண்டித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசின் இந்த நடவடிக்கையை ஒரு “துரோகச் செயல்” என்றும் கட்டமாக சாடியுள்ளார்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான செவிலியர்கள், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தவெக அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது X தளப்பக்கத்தில், "கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?. பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?. போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!. முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?. போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?.
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?" என்று கடுமையாக தனது கண்டனத்தை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்