Anitha R Radhakrishnan Anitha R Radhakrishnan
தமிழ்நாடு

"6 மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்.." ஜாமினில் வெளிவந்த அனிதா ராதாகிருஷ்ணன்! மீண்டும் சர்ச்சையில் சிக்கப்போகிறாரா திருசெந்தூர் MLA?

"சினிமாவில் நடித்து நடிகைகளுடன் சந்தோசமாக சுற்றி வந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டார்கள்"

Vinvizhi Leninton

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி MLA மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன். கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பற்றி சில அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார்.

மேலும், "தான் ஒரு வியாபாரி என்றும் தன்னை நோக்கி வருபவர் கடன் பெற வருகிறாரா? அல்லது காசு கொடுத்து பொருட்கள் வாங்க வருகிறாரா? என்று வருபவர் முழியை வைத்து கண்டுபிடித்து விடுவேன். அதேபோல் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மொழியானது "சினிமாவில் நடித்து நடிகைகளுடன் சந்தோசமாக சுற்றி வந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டார்கள்" என்பது போல் இருக்கிறது" என முதல்வர் பற்றி அவதூறாக பேசினார்.

இந்த விவகாரம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் MLA மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக வெற்றி கழக ஆத்தூர் நகர செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 352, 353 (2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்குப்பதிவில் முன்ஜாமின் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தள்ளுபடி செய்யப்பட்டு ஒன்றரை மணி நேரத்தில் ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் காவல்துறை வாகனத்தில் அவரை அழைத்து சென்ற போது வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பல மணி நேரம் வைத்திருக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரவு 11 மணிக்கு மேல் திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜர் செய்யப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நிலையை கருத்தில் கொண்டு பத்து நாள் ஆத்தூர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பமிட உத்தரவிட்டு ஜாமீனில் விடுவிப்பதாக தெரிவித்தார். மேலும் மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் தார் மூலம் ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், "எந்த காரணத்தைக் கொண்டும் எதற்கும் திமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள் என்பது வரலாறு. மேலும், ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆட்சி (தவெக) கவிழ்ந்து விடும் என அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.