தமிழ்நாடு

“சிப் ஆலைக்கு ஒரு நீதியா?” - பரந்தூர் விவசாய நில விவகாரத்தில் விஜய் அரசை சாடிய பாமக அன்புமணி!

மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்றும்

Muthu Lakshmi

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே மதுரமங்கலம் பகுதியில் செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட தொழில் திட்டங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் புதிய அரசாணைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இதில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்களும், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நில உரிமையாளர்களை அழைத்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டிய அவர், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக மதுரமங்கலம் கிராமத்தில் 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இதற்காகவே நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். மதுரமங்கலத்தில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளதாகவும், அவை நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நீண்டகால வாழ்வாதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகள் மட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றும் வேளாண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மதுரமங்கலம் பகுதி பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு அருகில் இருப்பதையும் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அந்தத் திட்டத்தை கைவிட்ட அரசு, தற்போது அதே பகுதிக்கு அருகில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா?” என முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 423.35 ஏக்கர் நிலம் தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும், செமிகண்டக்டர் பூங்காவையும் ஏற்கனவே அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரமங்கலத்தில் 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் நீதி வழங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்