Mudukulathur  
தமிழ்நாடு

முதுகுளத்தூர் கோட்டையை பிடிக்கப்போவது யார்? ராஜகண்ணப்பனுக்கு அதிர்ச்சி கொடுக்குமா அதிமுக? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

உட்புறக் கிராமங்களுக்கான இணைப்புச் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான முதுகுளத்தூரில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்து விரிவான கள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தொகுதியானது மறைந்த மூத்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி என்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகுளத்தூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், இங்கு இளைஞர்களின் பங்கு கணிசமாக உள்ளது. 18 முதல் 25 வயதுடையவர்கள் 12.8 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும், 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.2 சதவீதமும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18.27 சதவீதமும் உள்ளனர். சமுதாய ரீதியாகப் பார்த்தால், முக்குலத்தோர் 30 சதவீதம், தேவேந்திரகுல வேளாளர் 20 சதவீதம், யாதவர்கள் 15 சதவீதம், முஸ்லிம்கள் 12 சதவீதம் மற்றும் நாடார்கள் 5 சதவீதம் என்ற அளவில் பரவி உள்ளனர். இந்தத் தொகுதி 88 சதவீத கிராமப்புறப் பகுதிகளையும், 12 சதவீத நகர்ப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு விவசாயம் சார்ந்த தொகுதியாகும்.

முதுகுளத்தூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பு விவரத்தை தேர்ந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பார்க்கையில், புகழ்பெற்ற முதுகுளத்தூர் குண்டு மிளகாயைப் பாதுகாத்து வைக்கப் போதிய குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாதது விவசாயிகளுக்குப் பெரும் கவலையாக உள்ளது. பருவமழை பொய்க்கும் காலங்களில் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திப்பதோடு, வைகை நீர் கடைமடை வரை வராதது மற்றும் நிலத்தடி நீர் உப்புத் தன்மையோடு இருப்பது போன்றவை பெரும் குறையாக உள்ளன. கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் உட்புறக் கிராமங்களுக்கான இணைப்புச் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. மேலும், பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் வெளியூர்களுக்குச் செல்லும் நிலை நீடிக்கிறது. நவீன கழிப்பறை வசதிகள், கால்நடை மற்றும் வேளாண்மைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் புறவழிச்சாலை போன்றவை மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தரவுகளைப் பார்த்தால், திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 46 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி 36 சதவீத வாக்குகளையும், அமமுக 8.9 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5 சதவீத வாக்குகளையும் பெற்றன. அந்தத் தேர்தலில் திமுக 180 பூத்களில் வலுவாகவும், 85 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. அதேசமயம் அதிமுக 135 பூத்களில் வலுவாகவும், 110 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. சுமார் 142 பூத்கள் எந்தப் பக்கமும் சாயாத 'ஸ்விங்' நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி 42 சதவீத வாக்குகளையும், ஓபிஎஸ் 35 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் ஜெயபெருமாள் 9 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இதில் திமுக கூட்டணி 142 பூத்களில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதிமுக கூட்டணி 22 பூத்களில் மட்டுமே வலுவாக இருந்தது.

தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுகவுடன் கடும் போட்டியைச் சந்திக்கும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்றவர்கள் சுமார் 21 சதவீத வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று தெரிகிறது. பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 121 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 94 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 110 பூத்கள் இன்னும் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானிக்க முடியாத 'ஸ்விங்' நிலையில் உள்ளன. அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் வெறும் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பனுக்கு இந்த முறை வெற்றி என்பது அத்தனை எளிதாக இருக்காது என்றும், அங்கு ஒரு 'டஃப் ஃபைட்' நிலவும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.