தமிழ்நாடு

“17 வயசு குழந்தைக்கு என்ன சார் தெரியும்?” - வள்ளுவர் கோட்டம் பைக் ரேஸ் விவகாரத்தில்.. கைதுக்கு எதிராக பெற்றோர் வாக்குவாதம்!

"பெரிய பெரிய கேஸ்லாம் விட்டுறீங்க, ஒண்ணும் இல்லாத கேஸ்க்கு ஆக்சன் எடுக்குறீங்க” என்றும் கொந்தளித்தனர்.

Muthu Lakshmi

நேற்று சென்னை பிரதான சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சுமார் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனங்களில் திரண்ட 15 முதல் 20 இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தல் வகையிலும், பொது சொத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்களை இயக்கிய காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம், ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் திரண்டு அதிவேகமாக பைக்கை இயக்கி சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வாகன எண் மற்றும் பதிவு எண் அல்லாத வாகனங்களை கண்டறிந்து  நடவடிக்கையை தொடங்கினர். அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில்,  இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே, நேற்று ஐஐடி மேம்பாலத்தில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் குகன் (21) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்தபோது குகன் பைக்கை ஓட்டி வந்தாரா அல்லது பின்னால் அமர்ந்து வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்துக்குள்ளான பைக்கை உடன் வந்தவர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களை தொடர்ந்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து, சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க காவல்துறையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. 

பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் "எல்லாம் குழந்தைங்க சார், சின்னப்பசங்கள எங்கதான் சார் கூட்டிட்டு போறீங்க. 16, 17 வயது தான் ஆகுது எங்க சார் கூட்டிட்டு போறீங்க? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் “17 வயசு குழந்தைக்கு என்ன சார் தெரியும்? பெரிய பெரிய கேஸ்லாம் விட்டுறீங்க, ஒண்ணும் இல்லாத கேஸ்க்கு ஆக்சன் எடுக்குறீங்க” என்றும் கொந்தளித்தனர். “குழந்தைகளை விட்டுட்டு போக சொன்ன எப்படி போக முடியும்" என்றும் "அவர்கள் பெட்ரோல் தான் போடா போனார்கள்" என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே போலீஸ்-க்கு நல்ல பேரு.. இருக்குற கேஸ் எல்லாம் விட்டுறீங்க, ஒன்னும் இல்லதாக கேஸ்க்கு இவ்ளோ ஆக்சன் எடுக்குறீங்க. "நம்பர் பிளேட் கரெக்ட்டா போட்டதுதான் எங்க தப்பு" என்றும் காவல் நிலைய வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் என்ற பெயரில் வீலிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், பைக் சாகசங்களில் ஈடுபடும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்