

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த இடைத்தேர்தல் ஐந்து முனைப் போட்டியாக நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த வகையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக தாராபுரம் பகுதிக்கு சென்றுள்ளார்.
முதல்வர் விஜய்யைக் காண வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். விஜயை வரவேற்ற மக்கள் ஆரத்தி எடுத்தும், ஆரவாரம் செய்தும் வரவேற்றனர். விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தொண்டர்கள், தங்களது புகைப்படங்களையும் அவரிடம் வழங்கி, மக்களின் கோரிக்கை மனுக்களையும் விஜய் பெற்றுக்கொண்டார். ரோடு ஷோவின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் சந்திக்கும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன்” என்று தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா,நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 20 நாட்களுக்குள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைந்தார். உடனடியாக தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் தான் ராஜினாமா செய்த தொகுதிக்கே தவெக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் சத்யபாமா. இது அந்த தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதை சரி செய்யும் வகையில் முதல்வர் விஜய் 30ம் தேதி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதையடுத்து நேற்று ரோடு ஷோ சென்றுள்ளார்.
ரோடு ஷோவின் ஒரு பகுதியாக, தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த விஜய், வழியில் நின்றிருந்த விவசாயி ஒருவரின் மாட்டு வண்டியில் ஏறி, கயிற்றைப் பிடித்து மாடுகளை இயக்கியபடி, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்.
மேலும் அங்கிருந்தவர்களை நெகிழ வைக்கும் வகையில் ஒரு முதல்வரின் அன்பான செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்த விஜய், சாலையில் வீல்சேரில் காத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பார்க்க பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார். மேலும் அவரின் கோரிக்கைகளை குனிந்து கேட்டறிந்தார்.
அதனையடுத்து அவர்களின் முகவரி மற்றும் விவரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் இறங்கி வந்து, பொறுமையாக மாற்றுதிறனாளியின் கோரிக்கைகளை கேட்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பின்னர் அங்கிருந்த அதிராகரிகள் சற்று பதறி போய் கூடியதில் அந்த இடம் கூட்டமானது. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் முதல்வரின் செயலை வெகுவாக பாராட்டினர். இதற்கு முன் மதுராந்தகம் ரோடு ஷோ வின் போதும் இதேபோல் , மாற்றுத்திறனாளிகள் மனுக்களை பெற்று, அவர்களுடன் அன்புடன் உரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்