vijay  
தமிழ்நாடு

"தேர்தலை விட்டு விலகுவோமே தவிர.. விஐய்யோடு சேர மாட்டோம்".. ஓப்பனாக கூப்பிட்டும் தவெக-வை சீண்டாத கட்சிகள்! ஏன்?

கூட்டணியில் இருந்து விலகுக்குகின்ற கட்சிகள் விஜய்யின் தவெகவில் இணைய விரும்பவில்லை என்பதே உண்மை...

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்தல் என்பது மும்முனை போட்டியாக அமையும் என்று பலராலும் கூறப்படுகிறது. திமுக 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி' தலைமையில் இந்த முறை புதிதாக, தேமுதிக சேர்ந்துள்ளது. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கி வருவதில் சில சிக்கல்களை சந்தித்தாலும், திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டினை உறுதி செய்துவருகிறது.

புதிதாக வந்த தேமுதிக கட்சிக்கு 10 தொகுதிகளை வழங்கினார். மேலும் சில கூட்டணி கட்சிகள், தங்களுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தாலும் கூட்டணியை தொடரவதாக கூறினார். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக கட்சியினர் போன்றோர் தங்களுக்கு, தங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். மேலும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மட்டும் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். மேலும், கமல் ஹாசன் திமுகவிற்கு நிபந்தனை இன்றி ஆதரவளிப்பதாக கூறினார். ஆனால் விலகிய இந்த இரு கட்சியும் தவெகவில் இணையவில்லை. விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, 'ஜென் Z' தலைமுறையினரிடம் அவருக்கான ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் கூட்டணியில் இருந்து விலகுக்குகின்ற கட்சிகள் விஜய்யின் தவெகவில் இணைய விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் அதற்கான காரணங்கள் என்ன?

இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு, முதல் முறை ஓட்டு செலுத்துவோர்க்கு விஜய் நம்பிக்கையாக இருப்பதாக பார்க்கப்படுகிறார்கள், அவருக்கென்று பெருமளவில் ஒரு கூட்டம் கூடுகிறது. இருப்பினும் ஏன் தவெகவில் இணைய அவர்கள் விரும்பவில்லை?.

விஜய்யின் தவெக:

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினர். இக்கட்சிக்கு பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா போன்றோர் பதவி வகிக்கின்றனர். மேலும், அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். கொள்கை தலைவர்களாக, டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், பெரியார் ஈ. வே. ராமசாமி, காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்றோரை தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக அறிமுகப்படுத்தினார். விஜய்யின் ரசிகர்கள் அப்படியே அவருக்கு தொண்டர்களாக மாறினார். விஜய்யின் ஆதரவாளர்களாக இருக்கும், இவர்கள் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மாறும் என்றும், ஊழல் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என்றும் நம்பிக்கை வைத்தனர்.

கட்சியின் நிலை:

கட்சி ஆரம்பித்த சிலகாலங்களிலேயே தமிழக வெற்றி கழகம் மீது மக்கள் விமர்சங்களை வைக்க துவங்கினர். தனது மேடைகளில் எல்லாவற்றையும் பேசும் விஜய், தமிழகத்தை உலுக்கிய ஆணவ கொலையை பற்றியோ, நேரடியாக பாஜகவை பற்றியோ, மோடியை பற்றியோ பேசுவதை விஜய் தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் சலசலக்கப்பட்டது. இந்நிலையில், பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு 2025ல் செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் சென்றிருந்தனர். மேலும், விஜய்யை காண வேண்டும் என்று அங்கு ஏராளமான மக்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஜய் காலதாமதமாக வந்ததே இதற்கு காரணம் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கு சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், உச்சநீதிமன்றமும் சரமாரியாக விஜய் மீது கேள்வி எழுப்பியது. அதன்பின்பு, அவரது மாநாடுகளில் சரிவர எந்த வசதிகளும் மக்களுக்காக செய்வதில்லை. குறிப்பாக தண்ணீர் போன்ற எந்த அத்தியாவசியமும் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்பு, சேலத்தில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் கூட்டம் ஒன்றில் இவரை காண வந்த வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தது போன்ற நிகழ்வுகள் விஜய்யின் நிர்வாக திறன் மீது கேள்வியை எழுப்பியது.

இதுமட்டுமின்றி, விஜயை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் பின்னாலே சென்று பலரும் காயமடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டில், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு விஜயை பார்க்கச் சென்றுள்ளார். விஜய் தஞ்சாவூருக்கு செல்வதாக இருந்த நிலையில் அவரது வாகனத்தின் பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த விக்னேஷ் விபத்தில் சிக்கி காயமடைந்தார். மருத்துவமையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களின் முன்னேற்றங்களுக்கு உழைப்பதாகவும் கூறிவரும் தவெக, அவர்களுடைய கட்சியின் பெண் நிர்வாகியான தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னஸ் என்ற பெண், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்து களப்பணியாற்ற நினைத்து கட்சியில் சேர்ந்தார்.

ஆனால் தனக்கு பொறுப்பு வழங்கவில்லை என்று கூறி, பனையூரில் உள்ள விஜயின் அலுவலகத்திற்கு சென்று விஜய்யின் கார் வரும்போது அதை நிறுத்த நினைத்தார். ஆனால் விஜய்யின் கார் முன் பாய்ந்தும், அவரது கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது. இதனால் மனமுடைந்திருந்த அஜிதாவை தவெகவில் சிலர் அவரை திமுகவின் கைக்கூலி என்று கூறி, சமூக வலைத்தளங்களில் கேலி பேசிவந்தநிலையில், அஜிதா தற்கொலைக்கு முயன்றார். மேலும், கட்சியில் பதவிகள் வழங்க லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தவெக மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றி கழகத்தின் மீது விமர்சங்கள் வைப்பவர்களை 'விர்சுவல் வாரியர்ஸ்', மோசமான வார்த்தைகளால் வசைபாடிவந்தனர்.

மேலும், தவெகவை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் பெண்களை நோக்கி ஆபாசமான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர். இதுபோன்ற எந்த ஒரு செயல்களுக்கும், நிகழ்வுகளுக்கும் தவெக தலைவர் எதிர்வினை மாற்றவோ அல்லது தன்னுடைய ரசிகர்கள் அல்லது தொண்டர்களை நெறிமுறைப்படுத்தவோ அல்லது பொறுப்பெடுத்துக்கொள்ளவோ இல்லை.

கரூர் துயர சம்பவத்திற்கு, விஜய் பனையூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார். மேலும், இன்று வரை நடத்த எந்த ஒரு உயிரிழப்பிற்கோ, அல்லது பொறுப்பற்ற நிலையில் நடக்கும் நிகழ்விற்கோ நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமலும், அறிக்கை அல்லது இரங்கலோ தெரிவிக்காமல் இருந்துவருகிறார் விஜய். இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மீது இருந்த நன்மதிப்பை குலைக்க ஆரம்பித்தது. சமீபத்தில், ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து, பல அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பு குரல்களை எழுப்பியது.

நடிகர் ரஜினியும் ஆதவ் அர்ஜுனா கருத்தினை மறுத்து ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இந்த சர்ச்சைக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயிடம் இருந்து எந்த ஒரு கருத்தோ அல்லது கண்டனமோ வெளிவரவில்லை. மக்களை களத்தில் சென்று சந்திக்கவே விஜய் மறுக்கிறார் என்ற வாதமும் அரசியல் களத்தில் வைக்கப்படுகிறது. தன்னுடைய சினிமா பிரபலத்தையும், மக்கள் மீது அவருக்கு இருக்கும் ரசிகர் கொண்டாட்டதையும் வைத்துதான் விஜய் அரசியல் காயை நகர்த்துகிறார் என்று கூறப்படுகிறது.

காட்சிகள் புறக்கணிக்க காரணம்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விஜய் இந்த 2026 தேர்தலை தனித்து களம் காண்கிறார் என்ற கூறப்பட்டுவந்தது. மேலும், கட்சியில் இதுபற்றி விஜய் உட்பட அனைவரும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மட்டும் துணை முதல்வர் பதவி தருவதாகவும் கூறி தவெக தலைவரை அழைத்ததாக கூறியிருந்தார். மேலும், கட்சி மீதும், கட்சி தலைவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பிவந்த நிலையாலும், கட்சியின் நிலையில்லா தன்மையாலும் மற்ற கட்சிகள் தவெகவுடன் கூட்டணியை தவிர்த்து வருகின்றன. அரசியல் தலைவர்களுக்கு மத்தியிலுமே, தமிழக வெற்றி கழகத்தை 'பால்வாடி இயக்கம்' என்று அமைச்சர் சேகர் பாபுவும், தவெக பற்றி மதிப்பீடு இல்லை என்று சரத்குமாரும் கூறிவருகின்றனர்.

இதுபோன்ற அரசியலில் சீரான போக்கு இல்லாமையாலும், தவெக மீதான அதிகப்படியான விமர்சனங்களாலும் மற்ற அரசியல் கட்சியினர் விஜயுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பாமல் இருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.