தமிழ்நாடு

புதுச்சேரி தேர்தல்: பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்! பதற்றத்தில் திருக்கனுர் வாக்குச்சாவடி

1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 55.72% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் கேரளாவில் 46.20%

Muthu Lakshmi

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் இன்று அதிகாலை முதலே உற்சாகமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, பொதுமக்களின் ஆர்வமான பங்கேற்புடன் விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 37.06% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 30 தொகுதிகள் கொண்ட இந்தச் சிறிய மாநிலத்தில், தேர்தல் முடிவுகள் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கட்சிகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. மே 4ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் அரசியல் நிலவரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 55.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.  மேலும் கேரளாவில் 46.20% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதையடுத்து அசாம் மாநிலத்தில் 59.07% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை அத்ரி வருகின்றனர். 

இந்தத் தேர்தலில் முக்கியமான போட்டி இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நிலவுகிறது. புதுச்சேரியில்  என்.டி.ஏ கூட்டணி, தற்போதைய முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முனைந்துள்ளது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து களமிறங்கியுள்ள இந்த கூட்டணி, ரங்கசாமியின் ‘மக்களோடு முதல்வர்’ என்ற நேர்மையான படிமத்தை முன்னிறுத்தி வாக்குகளை கோருகிறது. 2021ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் இவரது நிர்வாக அனுபவம் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு இவர்களுக்கு பலமாக கருதப்படுகிறது.

மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து ஆட்சியை மீட்க தீவிர முயற்சியில் உள்ளன. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், மாநில அளவிலான தலைவர்கள் முதல் தரை மட்ட செயற்பாட்டாளர்கள் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான உள்மோதல்கள் கூட்டணிக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி தேர்தலின் முக்கிய தனிச்சிறப்பு, கட்சிகளை விட வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகம் பேசப்படும் நிலை தான். குறைந்த தொகுதிகள் கொண்டதால், சில நூறு வாக்குகள் கூட வெற்றியை தீர்மானிக்கும். அதனால் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் திருக்கனூர் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்த தாகக காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர். இதில் மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸ் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.