தமிழ்நாடு

"விஜய்யை வார்த்தைகளால் வச்சு செய்யும் சீமான்".. பதிலடியும் கொடுக்க முடியாமல்.. வெளியேயும் சொல்ல முடியாமல் புழுங்கும் தவெக!

உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்... நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே, எதுக்கு வர்ற..

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியல் களம் எப்போதும் வார்த்தை மோதல்களுக்குப் பஞ்சம் வைத்ததில்லை. ஆனால், அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நோக்கி தொடுத்த வார்த்தை யுத்தம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை ஒருமையில் விமர்சித்தும், அவரது அரசியல் பிரவேசத்தை கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கியும் சீமான் பேசிய விதம், த.வெ.க.வினரை வெளியிலே சொல்ல முடியாமல் புழுங்க வைத்துள்ளது.

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "என்னுடைய தம்பியை கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்... நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே, எதுக்கு வர்ற?" என்று கேள்வி எழுப்பியது, விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியது.

மேலும், சீமான் விஜயகாந்த், எம்.ஜி.ஆர், மற்றும் ஸ்டாலின் ஆகியோருடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசினார். "ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எம்ஜிஆர் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மக்களின் மொழியிலேயே பேசுவார். அய்யா ஸ்டாலின் கூட சின்ன சீட்டில் எழுதி வைத்து தான் பேசுவார். என் தம்பியும் எடப்பாடியும் முழு சீட்டு வைத்து பேசுவார்கள். ஆனால் இவரால் மழையில் பேசமுடியாது, காகிதம் நனைந்திடும்" என்றார்.

"தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்துள்ளது" என்று சீமான் நேரடியாக விமர்சித்தது, விஜய்யின் கட்சியை ஒரு அரசியல் கட்சியாக அவர் அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், "தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை, வளங்கள் என்ற ஒரு வார்த்தையாவது விஜய் பேசியது உண்டா? அனைவரும் ஒன்று என்றால் கட்சியை ஆந்திராவில் ஆரம்பிக்க வேண்டியது தானே?" என்று கேட்டது, விஜய்யின் தமிழ் உணர்வு குறித்த கேள்விகளை எழுப்பி, தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் சீமானின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சீமானின் இந்தத் தாக்குதல்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை. கட்சியின் தலைமை, தொண்டர்களுக்கு சீமானின் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த மௌனம், வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு அரசியல் முதிர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால், கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இது பெரும் மனக்குழப்பத்தையும், புழுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் தாக்குதல்கள் மிகவும் தனிப்பட்டதாகவும், அவமானகரமானதாகவும் இருப்பதால், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். தங்கள் தலைவரைப் பாதுகாக்க முடியாமல், தலைமை கொடுத்த உத்தரவால் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. இது, ஒரு புதிய அரசியல் கட்சிக்கு ஏற்படும் முதல் பெரிய சவால். ஒருபுறம், சீமானின் தாக்குதல்களுக்குப் பதிலளித்தால், அது ஒரு சாதாரண வார்த்தைப் போராக மாறி, கட்சியின் நோக்கத்தை மாற்றும். மற்றொருபுறம், பதிலளிக்காமல் இருந்தால், அது பலவீனம் போலத் தோன்றலாம்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் விஜய் ஒரு பெரிய நட்சத்திர செல்வாக்கு பெற்றவர். சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு உள்ள முக்கிய வாக்கு வங்கி, விஜய் ரசிகர்களிடையே உள்ளது. எனவே, விஜய்யை தொடக்கத்திலேயே கடுமையாக விமர்சிப்பதன் மூலம், அந்த இளைஞர் வாக்குகளைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள சீமான் முயற்சிக்கிறார் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.