தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன், இந்த இயக்கம் தொடங்கும் போது அவருக்கு பின்னால் நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975 ஆம் ஆண்டு பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியத்திற்கு என்னை கட்டி தழுவி பாராட்டியவர் எம்ஜிஆர். எதிர்க்கட்சியினர் எங்கள் கட்சியை பார்த்து படம் போல நூறு நாட்களில் மறைந்துவிடும் என தெரிவித்தனர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார் பத்தாயிரம் மைல் தொலைவில் இருந்து வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தார். அவர் மறைந்த பிறகு இயக்கம் இரண்டாக உடைந்தும் அதில் புரட்சி தலைவி அம்மாவுடன் எனது பயணத்தை மேற்கொண்டேன்.
அம்மா அவரது சுற்று பயணங்களை மேற்கொள்ளும் போதும் சரி சில முக்கியமான ஆலோசனைகளை கேட்கும்போதும் சரி நான் அந்த பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். “இமயம் தலையில் விழும்போதும் எனக்காகவும் இயக்கத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர்” என பாராட்டப் பெற்றவன். அப்போது இருந்த காலம் இப்போது இல்லை எல்லாம் மாறிவிட்டது. பின்னர் இயக்கம் மூன்றாக உடைந்தது அவர்களை ஒன்றிணைத்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பணிகளை மேற்கொண்ட போது முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள். தேவர் ஜெயந்திக்கு சென்றபோது எனது உறுப்பினர் பதவியை எடுத்துவிட்டார்கள்.
ஐம்பது ஆண்டுகள் உழைத்த எனக்கு இந்த உறுப்பினர் பதவியை எடுத்து பரிசு கொடுத்தார்கள், அதுமட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்தவர்களையும் உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கினார்கள். இதற்கெல்லாம் மேலாக மகேஷ் என்பவரின் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரையும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு பிறகு தெளிவாக முடிவெடுத்து தான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைத்திருக்கிறேன். நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை இன்று அதிமுக திமுக வேறு வேறு இல்லை இரண்டும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது.
ஒரு தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைவதற்காக இன்று நம் இளவல் விஜய் மிகப்பெரிய கழகத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் என்ன தமிழகத்திலே ஒரு மாற்றம் வேண்டும். இவர் மட்டும் தான் தமிழகத்தை ஆள வேண்டும் ஒரு புதிய மாற்றம் தேவை. எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்ற பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். 2026 ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இளவல் விஜய் ஆட்சி அமைப்பார்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.