கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியரின் செல்போனுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தவெக MLA மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜூலை மாதமே ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான் இது குறித்து புகார் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்திக்கு பின், மகளிர் ஆணையமே நேரடியாக தலையிட்டு, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருந்தது.இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை கொடுக்க வலியுறுத்தி இருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட MLA அருள் விக்னேஷ் செய்தியாளர்கள் கேட்ட போது, “இது உண்மை இல்லை” என்றும் “என் மீது உள்ள வன்மங்கள் தான் காரணம்” என்றும் தெரிவித்திருந்தார். விவகாரம் தொடங்கிய முதலே MLA அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, இவை ஆதாரமற்றவை என்றே தெரிவித்து வந்தார்.
தவெக அமைச்சர்கள் சிலரும், இது வாட்சப் வதந்தி என்றும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், “கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் பாவம் என்றும், அவர் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் இருந்தது வந்தவர், அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்பினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, TVK சட்டமன்ற உறுப்பினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக இந்த விவாகரத்திற்கு பிறகு, செய்தியாளர்களை முற்றிலும் தவிர்த்து வந்தார்.
ஆனால் தொடர்ந்து பணிகளில் எந்த சுணக்கமும் இல்லாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தார். உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை, பேசுபொருளாக உள்ள ஒரு சூழலிலும், தான் ஏற்ற பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து காலத்தில் நின்றார் ஆட்சியர் பத்மஜா. நவம்பர் 16 அன்று நடந்த மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் பத்மஜா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுடன் உரையாடினார். முதியவர்களின் குறைகளை பணிவாக கேட்டு பெற்றுக் கொண்ட சம்பவம் அப்போது கவனம் பெற்றது. ஆட்சியர் பத்மஜா தான், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து நெருக்கடிக்கு உள்ளானதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட மனு, நவம்பர் 23-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தலைமைச் செயலாளருக்கு இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற தொல்லைகள் ஒரு புறம் இருக்க, தனது பொறுப்பிலும் சட்ட போராட்டத்திலும் பின்வாங்காமல் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர். இது குறித்து தனது சமூக வலைதளபக்கத்தில் முன்னாள் திமுக அமைச்சர் TRB ராஜா பகிர்ந்த பதிவில், “இவர்தான் உண்மையான சிங்கப்பெண்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் போலியாக உருவாக்கப்பட்ட தவெக அரசின் சிங்கப் பெண் படை, யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பையும் தர முடியாத நிலையில், ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியர் உண்மையான சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார்.
மேலும் “ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கூட்டுச் சதி செய்வது போல செயல்பட்ட நிலையில், பெண் ஆட்சியரின் மன நிலை என்ன பாடுபட்டிருக்கும்? இன்னொரு மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள அவரது கணவரின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்! உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். தம்பதியினருக்கே இந்த #தவெக அரசில் நியாயம் இல்லை. நீதி இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், துணிந்து முடிவெடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம், பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளார். எந்த ஒரு பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத த.வெ.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பது அவரது பெரும் தைரியமிக்க போராட்ட உணர்வைக் காட்டுகிறது. இனி இந்த அரசிடமிருந்து அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு. இவ்வளவு பெரும் அரசியல் அழுத்தத்திற்கு பிறகும் தனி ஒரு ஆளாக தைரியமாக உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள, பாரதியின் உண்மையானப் புதுமைப் பெண்ணான இவரைத் தமிழ்நாடு என்றென்றும் கொண்டாடும்” என்று பாராட்டியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்