"கைது செய்யப்படுவாரா தவெக MLA?" - பெண் கலெக்டருக்கு ‘ஆபாச மெசேஜ்’.. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் FIR பதிவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு
TVK MLA arul vignesh
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியரின் செல்போனுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தவெக MLA மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடங்கிய முதலே MLA அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, இவை ஆதாரமற்றவை என்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் என்றும் தெரிவித்து வந்தார். மேலும் தவெக அமைச்சர்கள் சிலர், இது வாட்சப் வதந்தி என்றும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது 

தற்போது தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் பிரிவுகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் பிரிவு 4 (1) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 75, 78, 79 மூன்று பிரிவுகளில் கூடுதலாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. 

தவெக எம்எல்ஏ-விடமிருந்து முறையற்ற குறுஞ்செய்திகள் மற்றும் தகாத அணுகுமுறைகள் இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதற்கு முன்னதாக ஜூலை மாதமே ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரத்தை நவம்பர் 15-ஆம் தேதியே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம் (NCW), தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி, இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி நடவடிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியிருந்தது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வந்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட மனு, நவம்பர் 23-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார் வராமல் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மட்டும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தெரிவித்தார். தலைமைச் செயலாளருக்கு இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

இதையடுத்து, இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் எம்எல்ஏ கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் விமர்சித்துள்ளார். மேலும் நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியை பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் வலியுறுத்தி உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்