தமிழக முதல்வர் ஜோசேப் விஜய் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு, பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம், தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறப்பு காவல் படை அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி “சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை” எனும் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து 'சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டம் 2026 மே 10 அன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது. பின்னர் மே 29 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, பின் திடீரென விழா தேதி மாற்றியமைப்பதாக தெரிவித்தனர்.
அதனையடுத்து இன்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் விழா தொடங்கும் என்றும், முதல்வர் இத்திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றசெயல்கள் தடுக்கப்படும். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல்
குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல். மேலும் காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல். பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல். பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாதுகாப்பு படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் காவலர்களுக்கு நீல நிற சட்டை மற்றும் காக்கி நிற கால் சட்டை என சிறப்பு சீருடை வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு ஜீப் வாகன வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிய வரும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று தொடங்க உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் ஒரு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.