தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் ராஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும் என்று கருதிய அப்பகுதி மக்கள் கடந்த 2018- ஆம் ஆண்டு மே மாதம் 22- ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாபெரும் அமைதி போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அமைதிப் போராட்டமானது திடீரென கலவரமாகவும், வன்முறையாகவும் மாறியது. இதில், பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் அந்த பகுதி மேலும் கலவரமாக மாறி கட்டுக்குள் வரமுடியாத நிலை உருவானது.
குறிப்பாக அந்த சம்பவத்தில் காவல்துறை வாகனத்தின் மேல்பகுதியில் நின்றவாறு மஞ்சள் டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்த காவலர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் அப்போது தமிழகத்தையே உலுக்கியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
வாகனத்தில் மேல் ஏறி துப்பாக்கி சூடு நடத்தியவர், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் ராஜா என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆயுதப்படை காவலர் ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் ராஜா உடல்நலக்குறைவால் சிகிக்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 2018 இல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை 2022 அக்டோபரில் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு டி.எஸ்.பி, மூன்று ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், எட்டு காவலர்கள், மூன்று தாசில்தார்கள் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ.50 லட்சம் வழங்கவும் பரிந்துரைத்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்