திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்த நீதிபதிகள், நாளை (நவ. 28) தீபத்தூணில் தீபம் ஏற்றவும், மலைப்பகுதியை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பாதுகாப்பின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, கார்த்திகை தீபத் திருநாளன்று வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால், உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும், கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அதற்கு மத்தியப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை இன்று(நவ 27) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தர்காவின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், தர்காவின் பாதுகாப்பைக் குறைக்கப்போவதில்லை என்றும், மாறாக அதனை மேலும் பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது குறித்து கடுமையான அதிருப்தியை நீதிபதிகள் வெளிப்படுத்தினர். நவம்பர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்படாதது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர். மேலும், "நீதிமன்ற உத்தரவுகளை இவ்வாறு மெத்தனமாகக் கையாளும்போது நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் அது அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு வழிவகுக்கும்" என்று நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை, அந்த நீதிமன்றமே மாற்றியமைக்கும் வரை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறும் போது செயலற்று அமர்ந்திருக்க முடியாது என்றும் கூறினர். அரசியலமைப்புச் சட்டத்தின் 129-வது பிரிவின்படி உச்சநீதிமன்றத்திற்கு நீதிமன்ற அவமதிப்பை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். தீபம் ஏற்றுவதற்கான குழுவிற்கு அனுமதி அளிக்க மறுத்து, தீபம் ஏற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் கோயில் செயல் அலுவலர் கையொப்பமிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து, அதனைச் செயல்படுத்த வேண்டுமென்றே அறங்காவலர் குழு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் முதற்கட்டமாகக் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்தத் தீர்மானத்தைக் காரணமாகக் காட்டி மாவட்ட ஆட்சியரும் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. கோயில் நிர்வாகிகள் யாரையும் தீபம் ஏற்றுவதற்கு நியமிக்காததால் உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை என ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார். மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகக் கூறி மன்னிப்பும் கோரியிருந்தார்.
ஆனால், ஆட்சியரின் அறிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் செயல்படும் ஆட்சியருக்கு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான விரிவான அதிகாரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினர். ஆட்சியரின் அறிக்கை மேலோட்டமாகப் பார்க்கும்போது முதலைக் கண்ணீர் வடிப்பதைப் போல இருப்பதாகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அறங்காவலர் குழுவினர் யாரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும், கோயில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காகத் தனியாக ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மூன்று நாட்களுக்குள் நேரில் நோட்டீஸ் வழங்குவதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும், நோட்டீஸ் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யத் தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தனர். இறுதியாக, நாளை (நவ. 28) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மலைப்பகுதியை சிஆர்பிஎப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரவும் அறிவுறுத்தினர். அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்