தமிழ்நாடு

தாம்பரம்.. திமுகவின் 'ராஜா'வுக்கு செக் வைக்குமா அதிமுக? படித்த வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவார்களா?

2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று..

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் முக்கியப் பகுதியாகத் திகழும் தாம்பரம், அரசு ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் தொகுதியாகும். தற்போதைய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், 2026 களம் புதிய சவால்களைக் கொண்டுள்ளது.

தாம்பரம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.5 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19.2 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 35 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். வன்னியர்கள் 18 சதவீதமும், முதலியார்கள் 10 சதவீதமும், பிராமணர்கள் 8 சதவீதமும் உள்ளனர். 93 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முடிவே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தாம்பரம் பேருந்து நிலையப் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் முதலிடத்தில் உள்ளது. பெருங்களத்தூர் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு மக்களின் பெரும் குமுறலாக உள்ளது. அவசர சிகிச்சைக்குத் தகுந்த பன்னோக்கு அரசு மருத்துவமனை வசதி இல்லாமை மற்றும் உட்புறச் சாலைகள் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது தாம்பரம் மக்களின் நீண்ட காலப் புகாராகும். போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் சத்தம் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது.

தாம்பரம் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 32.4 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 33.6 சதவீதமாகச் சற்றே அதிகரித்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 133 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 135 ஆகத் தக்கவைத்துள்ளது. அதிமுக 2021-ல் 90 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-லும் 91 பூத்களாகவே உள்ளது. சுமார் 21 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, தாம்பரத்தில் திமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 45 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 28 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போட்டி நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.