தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தான். விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனவரி 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இந்த படத்தின் தணிக்கை வாரிய வழக்கின் தீர்ப்பு 9 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறார். மேலும் ‘ஐந்து பேர் கொண்ட தணிக்கை வாரிய குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. படத்தை பார்த்து தணிக்கை சான்று கொடுத்த உடன் தணிக்கை குழுவின் தலைவருக்கான அதிகாரம் முடிந்துவிட்டது. பின்னர் மறு ஆய்விற்கு அனுப்பும் அதிகாரம் தணிக்கை வாரிய குழுவிற்கு இல்லை’ என தெரிவித்தார்.
மேலும் ‘படத்தை மறு ஆய்விற்கு அனுப்பியதை முறையாக தணிக்கை வாரிய குழு ஏன் படக்குழுவிடம் தெரிவிக்கவில்லை என்றும், சான்றிதழ் வழங்கிய குழு உறுப்பினரே மீண்டும் ஆட்சேபனை இருப்பதாக புகார் மனு கொடுத்திருப்பது ஏற்புடையதா? என்றும் சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து தணிக்கை வாரிய குழுவின் தலைவர் ஜனநாயகன் பட விவகாரத்தில் அதிகார வரம்பை மீறி உள்ளார்’ எனவும் தெரிவித்தார்
இதனை ஏற்க மறுத்து தணிக்கை வாரிய குழு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிப்பது, மறு ஆய்விற்கு அனுப்புவது என அனைத்து அதிகாரங்களும் தணிக்கை வாரிய குழுவிற்கு உள்ளது என வாதிட்டது. மேலும் நீதிபதி அள்ளித்த தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை என தெரிவித்து மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு அவசர வழக்காக இன்று மதியம் 2 மணியளவில் இரண்டு நீதிபதிகள் தலைமையில் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதை ஏற்காமல் தணிக்கை வாரிய குழு மேல்முறையீடு செய்வது மீண்டும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் இரண்டு மணியளவில் விசாரிக்கப்படும் வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை வைத்து ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படுமா என தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.