தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகுமா என்பது குறித்த இறுதித் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இந்தப் படத்தின் ரிலீஸ் விவகாரம் தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் (Censor Board) வேண்டுமென்றே படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தாமதம் செய்வதாகத் தயாரிப்பு தரப்பு மிக முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஏற்கனவே படத்தில் சொல்லப்பட்ட மாற்றங்களைச் செய்த பிறகும், ஒரு தனிநபரின் புகாரைக் காரணம் காட்டி தணிக்கை வாரியம் படத்தை மறுசீராய்வு குழுவிற்கு அனுப்பியது ஏன் என்றும், இது சட்டப்படி தவறு என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஒரு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் இது போன்ற சிக்கல்கள் எழும் போது ஏன் எல்லாமே ‘அப்நார்மலாக’ (Abnormal) இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். குறிப்பாக, தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். வழக்கமாக ஒரு படத்திற்குத் தணிக்கை அனுமதி கிடைப்பதில் இருக்கும் நடைமுறைகளைத் தாண்டி, இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்பது குறித்து நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
மேலும், படத்தயாரிப்பு தரப்பு முன்வைத்த மற்றொரு வாதத்தில், ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் என்பது பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு, அதற்கான திரையரங்கு முன்பதிவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை ரிலீஸ் தள்ளிப்போனால் அது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றும், அரசியல் காரணங்களுக்காகத் தணிக்கை வாரியம் செயல்படுகிறதோ என்ற அச்சம் இருப்பதாகவும் கூறப்பட்டது. நீதிபதி குறுக்கிட்டு, இந்தப் படத்தை தை பிறந்த பிறகு வெளியிட முடியாதா என்றும், அவசரம் ஏன் என்றும் கேள்வி எழுப்பிய போதிலும், தயாரிப்பு தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது.
தற்போது தணிக்கை வாரியத்திற்குப் புகார் அளித்த அந்தத் தனிநபர் யார் மற்றும் அந்தப் புகாரில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத்தின் காட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தணிக்கை வாரியத்தின் முடிவு நாளை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை நீதிமன்றம் படத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்தால் மட்டுமே ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் சாத்தியமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் நாளை வரவிருக்கும் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.