தமிழ்நாடு முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள உருது பள்ளியின் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இருவரும் சேர்ந்து ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்த நிலையில் உள்ளே குத்துவிளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா முதலில் விளக்கேற்றிய நிலையில் அடுத்து பல்லவி மெழுகுவர்த்தியை வாங்க கையை நீட்டினார். ஆனால் மேயர் மெழுகுவர்த்தியை அவரிடம் வழங்காமல் அவரை புறக்கணித்து அருகில் இருந்த ஐ. ஏ. எஸ் அதிகரிடம் மெழுகுவர்த்தியை கொடுத்து விளக்கேற்றவைத்தார். இதனை தொடர்ந்து பல்லவி அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே சென்றுவிட்டார்.
அதனை தொடர்ந்து திரு.வி.க.நகர் நம்மாழ்வார் பேட்டை சுப்புராயன் ஒன்றாவது தெருவில் ரூபாய் 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மற்றொரு தொடக்கப்பள்ளி கூடம் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், கல்விக் குழு தலைவர் டி. விஸ்வநாதன் உள்ளிட்டோர் வந்து திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் பல்லவிக்காக சிறிது நேரம் காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி வருகை தந்த பிறகு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அறைகளுக்கு உள்ளே சென்று பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றி, மற்றொருபுறம் குத்துவிளக்கு ஏற்ற சொல்லி திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் மெழுகுவர்த்தி கொடுத்த நிலையில் அதனை அவர் வாங்காமல் “இல்லை வேண்டாம் நீங்களே ஏற்றுங்கள்” என்று கூறி பதிலடி கொடுத்தார்.
இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பின்னர் இருவரும் நிகழ்ச்சிகளை வழக்கம்போல் நிறைவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இது திட்டமிட்ட புறக்கணிப்பா அல்லது நிகழ்ச்சி ஏற்பாடுகளின்போது ஏற்பட்ட புரிதல் குறைவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. நிகழ்வின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.