தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சார்பில் நடைபெற்ற "சைபர் கேக்கத்தான் போட்டியில்" தமிழக மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 54 பேர் பங்கேற்றனர், இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினார்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் தற்போது, தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp மூலம் நடக்கும் பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சைபர் குற்றங்களை தடுப்பதற்கு எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும், என்பது குறித்த சைபர் கேக் கத்தான் என்ற போட்டி நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 18 குழுக்களை சேர்ந்த, சுமார் 54 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி "வ உ சி அரசு பொறியியல் கல்லூரியில்" நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தற்போது சைபர் குற்றங்களை எவ்வாறு தடுப்பது, சைபர் குற்றவாளிகளை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் மாநகர போக்குவரத்தை எவ்வாறு சரிப்படுத்துவது என்றும் மேலும் சைபர் குற்றம் தொடர்பான ஆவணங்களை எவ்வாறு கையாள்வது, குற்றங்களை தடுப்பது குறித்தும் தங்களது கட்டுரைகளை செயல்முறை விளக்கத்துடன் சமர்ப்பித்தனர்.
இதில் முதல் பரிசை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றனர், அவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது, இரண்டாவது பரிசாக ரூபாய் 40 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூபாய் 25000 மற்றும் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு ரூபாய் 5000 ரொக்க பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்