Tirupparankundram Deepam Controversy 
தமிழ்நாடு

“முதல்வர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற வழக்கறிஞர்கள்” - தீபம் ஏற்றாததைக் கண்டித்து போராட்டம்.. நெல்லையில் பரபரப்பு!

நீதிமன்ற உத்தரவுகளை அரசாங்கமே பாதுகாத்து மதிக்காத பட்சத்தில், சாமானிய மக்கள் எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பார்கள்?..

Mahalakshmi Somasundaram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேற்று(நவ 24) தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து, நெல்லையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான குற்றாலநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் கொடும்பாவியைப் போராட்டக்காரர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்.

தொடர்ந்து, முதல்வரின் படத்தைச் செருப்பால் அடித்தும், அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உதாசீனப்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டிய அரசே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற உத்தரவுகளை அரசாங்கமே பாதுகாத்து மதிக்காத பட்சத்தில், சாமானிய மக்கள் எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பார்கள்?

நாளை காவிரி அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதை மதிக்காத கர்நாடக அரசு, 'முதலில் நீங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்தீர்களா?' என்று கேள்வி எழுப்பினால் தமிழக அரசு என்ன பதில் சொல்லும்? அதேபோல், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு கேள்வி எழுப்பினால், இந்த ஜோசப் விஜய் அரசாங்கம் என்ன பதில் கூறும்? பொதுமக்களும் இதே கேள்வியைத்தான் எழுப்புவார்கள். சென்னையில் உயர் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி பிள்ளையார் கோயிலை இடித்தபோது மட்டும் நீதிமன்ற உத்தரவு அரசுக்கு இனித்ததா? தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் நீதிமன்றத்தின் மாண்பும் மதிப்பும் சிதைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமே நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத சூழலில், சாமானிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், வழக்கறிஞர்களுக்குத் தங்கள் தொழிலின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்” என ஜோசப் விஜய் அரசு மதவெறியுடன் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், 'யுவர் ஆனர்' (Your Honour) என்ற புனிதமான வார்த்தையைக் குறிப்பிட்டு, 'தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோல், யுவர் ஆனர்' எனச் சட்டத்துறை அமைச்சர் நக்கல் செய்வது மிகவும் கேவலமான செயல். நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் இந்த தவெக ஆட்சி நிச்சயமாக மக்களால் தூக்கி எறியப்படும் என்று குற்றாலநாதன் எச்சரித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்