தமிழ்நாடு

“ஓசினு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க.. 1000 ரூபாய் கொடுத்துட்டு சொல்லி காட்டுறீங்க..” - திருச்சியில் விஜய்யின் உரை முழு விவரம்!

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், டீசல் விலை குறைக்கப்படும், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 % சதவீதம் இட ஒதுக்கீடு..

Mahalakshmi Somasundaram

இன்று திருச்சியில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரசாரத்தில் பேசிய கழக தலைவர் விஜய் “போருக்கு போகும் முன்னாடி.. போரில் ஜெயிக்க குல தெய்வம் கோயிலுக்கு போய்ட்டுதான் போவாங்கலாம்.. அந்த மாதிரி.. அடுத்த வருடம் நடக்க போகிற போரில் ஜெயிக்க இங்கிருந்து துவங்குகிறேன். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் ஜனநாயக போருக்கு முன் மக்களை சந்திக்க வந்துள்ளேன். திருச்சியில் துவங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும்னு சொல்லுவாங்க.. அந்த காலத்துல அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜிஆர் எல்லாருமே தங்கள் முதல் அரசியல் பயணத்தை இங்குதான் துவங்கினார்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு உங்கள் ஓட்டுக்களை போடப் போகிறீர்களா?  தேர்தலின் போது திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், டீசல் விலை குறைக்கப்படும், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 % சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் என்று கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதா? 

மாத மாதம் மின்சாரம் கணக்கீடு செய்யபடும் என்றார்கள் செய்தார்களா, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என சொல்லி சில பெண்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு சொல்லி காட்டுகிறது திமுக அரசு, பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என அறிவித்து விட்டு ஓசி பேருந்து என சொல்லி காட்டுகின்றனர். திமுகவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெறுகிறது எத்தனை முறை கேள்விகள் எழுப்பினாலும் மீண்டும் மீண்டும் கேள்விகளையே எழுப்பி கொண்டிருக்கிறோம் பதில் மட்டும் வரவில்லை” என திமுக அரசை குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் “மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் எந்த தடைகளும் இன்றி மக்களுக்கு கிடைக்கும், சட்ட ரீதியான பிரச்சனைகளும், பெண்கள் பாதுகாப்பிலும் தமிழக வெற்றி கழகம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருப்போம், நடைமுறையில் சாத்தியமானதை மட்டுமே நாங்கள் சொல்வோம்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.